செய்திகள்
அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா

எல்லை பிரச்சனைக்கு தீர்வு வேண்டி உச்ச நீதிமன்றத்தை நாடும் அசாம்

Published On 2021-08-01 11:17 GMT   |   Update On 2021-08-01 11:17 GMT
அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மீது மிசோரம் போலீசார் கொலை முயற்சி, சதி திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கவுகாத்தி:

வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம் இடையே எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. சமீபத்தில் நடந்த எல்லை மோதலில் அசாம் போலீசார் 6 பேர் பலியாயினர். இதனால் அசாம் - மிசோரம் எல்லையில் கடும் பதற்றம் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக மிசோரம் மாநிலத்தின் எம்.பி. க்கள் உட்பட பல முக்கிய தலைவர்கள் மீது அசாம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
இதேபோல் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மீது மிசோரம் போலீசார் கொலை முயற்சி , சதி திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் முதல்வரின் தனி அலுவலக உயர் அதிகாரிகள் 6 பேர் மீதும்,  காவலர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.



இந்த சூழ்நிலையில், மிசோரம் மாநிலத்துடனான எல்லைப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண்பதற்காக உச்ச நீதிமன்றத்தை நாடப்போவதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறி உள்ளார். பிரச்சனையை தீர்த்தால் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க தயார் என்றும் அவர் தெரிவித்தார்.

மிசோரம் முதல்வர் சோரம்தங்கா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தொலைபேசியில் பேசிய சில மணி நேரங்களுக்குப் பிறகு அசாம் முதல்வர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, தனது மாநில அதிகாரிகளை விசாரிக்க அனுமதிக்க மாட்டேன் என்று சர்மா கூறியிருந்தார். மேலும் வட-கிழக்கு பகுதியின் உணர்வை உயிர்ப்புடன் வைத்திருப்பதே பிரதான நோக்கம் என்றும் சர்மா ட்வீட் செய்திருந்தார்.

அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை மூலம் எல்லை பிரச்சனையை சுமூகமாகத் தீர்ப்பதற்கு, அசாம் முதல்வர் சர்மா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ஒப்புக்கொண்டதாக மிசோரம் முதல்வர் சோரம்தங்கா கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News