செய்திகள்
குன்றக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.

கண்மாயில் தண்ணீர் திறந்ததை கண்டித்து குன்றக்குடி-மதுரை சாலையில் விவசாயிகள் திடீர் மறியல்

Published On 2021-01-11 11:45 GMT   |   Update On 2021-01-11 11:45 GMT
கண்மாயில் இருந்து தண்ணீர் திறந்ததை கண்டித்து குன்றக்குடி-மதுரை சாலையில் விவசாயிகள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காரைக்குடி:

சிவகங்கை மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் கண்மாய்கள், குளங்கள் நீர் நிரம்பி காணப்படுகின்றன. அந்த வகையில் காரைக்குடி அருகே சின்ன குன்றக்குடி பகுதியில் உள்ள கண்மாய் அதற்கான கொள்ளளவை எட்டிய நிலையில் நிரம்பியது. கண்மாயின் பாதுகாப்பை கருத்தில் கொண்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மடையை திறந்து விட்டனர்.

இதற்கிடையே அந்த கண்மாயை சுற்றி உள்ள விவசாயிகள், தண்ணீர் திறக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். யாரோ சிலர் தூண்டுதலின் பேரில் கண்மாய் நிரம்புவதற்குள் அதிகாரிகள் தண்ணீர் திறந்து விட்டதாக கூறி நேற்று காலை 11.30 மணிக்கு விவசாயிகள் குன்றக்குடி பஸ் நிலையம் அருகே திரண்டனர்.

பின்னர் குன்றக்குடி-மதுரை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் ஜெயந்தி, காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கண்மாய் நிரம்புவதற்குள் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பாசன பகுதி மிகவும் பாதிப்படையும். எனவே கண்மாய் நிரம்பும் வரை தண்ணீர் திறக்க கூடாது என விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர். கண்மாய் நிரம்பி கரை உடைந்து தண்ணீர் வீணாகி விடக்கூடாது என்பதற்காக தான் மடை திறந்து விடப்பட்டது என அதிகாரிகள் கூறினார்கள்.

இதில் சமாதானம் அடைந்த விவசாயிகள் தங்கள் மறியலை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே கொரோனா காலத்தில் அனுமதியின்றி திரண்டு மறியலில் ஈடுபட்ட சுப்பு தலைமையிலான 49 விவசாயிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Tags:    

Similar News