செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

மக்களைப் பற்றி கவலைப்படாத அரசு அதிகாரத்தில் இருக்கக்கூடாது - சுப்ரீம் கோர்ட் சவுக்கடி

Published On 2019-11-06 11:46 GMT   |   Update On 2019-11-06 11:46 GMT
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சுப்ரீம் கோர்ட், மக்களைப் பற்றி கவலைப்படாத அரசு அதிகாரத்தில் இருக்கக்கூடாது என கண்டித்துள்ளது.
புதுடெல்லி:
 
தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு மீதான விசாரணையை நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் தீபக் குப்தா ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க்கழிவு எரிப்பில் ஈடுபடுவதை உடனடியாக தடுக்க வேண்டும். இதற்கான துரித நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். காற்று மாசுவால் மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு இருப்பதாக தெரியவில்லை. இனிமேலும் விதிமீறல்களை பொறுத்துக் கொள்ள மாட்டோம்.

டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்தவில்லை என்றால் மக்கள் வாழ முடியாத சூழல் உருவாகிவிடும். மத்திய, மாநில அரசுகள் ஒன்றை ஒன்று குறைகூறாமல் ஒருமித்த கருத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, காற்று மாசுக்கு காரணமான பயிர்க்கழிவு எரிப்புகளை தடுக்காத அரியானா, பஞ்சாப் மாநில அரசுகளின் தலைமை செயலாளர்கள் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. 

இந்நிலையில், டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சுப்ரீம் கோர்ட், மக்களைப் பற்றி கவலைப்படாத அரசு அதிகாரத்தில் இருக்கக்கூடாது என கண்டித்துள்ளது.

இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தலைமை செயலாளர்கள் ஆஜராகினர். விசாரணையின் போது, தங்கள் கண்டனத்தை தெரிவித்த நீதிபதிகள், ''உங்கள் பணியை சரியாக செய்யவில்லை என்றால் பணி நீக்கம் செய்யப்படுவீர்கள். நிலைமையை சரிசெய்ய முடியவில்லை என்றால் மத்திய அரசு ஆட்சி செய்து கொள்ளட்டுமே.

7 நாட்களுக்குள் பஞ்சாப்பில் உள்ள பயிர்க் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான வேலைகளை செய்யுங்கள். செலவுகளைப் பற்றி கவலைப்படாதீர்கள். அதையும் நாங்கள் உங்களுக்குப் பெற்றுத் தருகிறோம்.

விவசாயிகளை தண்டிப்பது தீர்வாகாது, இவ்வாறு செய்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். பொதுமக்களிடம் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள், அவர்களுக்கு தேவையான கருவிகளை பெற்றுக் கொடுங்கள்" என தெரிவித்தனர்.
Tags:    

Similar News