ஆன்மிகம்
முருகன்

துன்பங்களை போக்கி வாழ்வில் இன்பம் தரும் கந்தசஷ்டி விரதம்

Published On 2020-11-19 03:34 GMT   |   Update On 2020-11-19 03:34 GMT
பக்தர்களின் துன்பங்களை போக்கி வாழ்வில் இன்பம் தரும் விரதங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் முருகப்பெருமானை நினைத்து வழிபடும் முக்கியமான விரதம், ‘கந்தசஷ்டி விரதம்’.
பக்தர்களின் துன்பங்களை போக்கி வாழ்வில் இன்பம் தரும் விரதங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் முருகப்பெருமானை நினைத்து வழிபடும் முக்கியமான விரதம், ‘கந்தசஷ்டி விரதம்’. இது குழந்தைப்பேறு கிடைக்கச் செய்யும் அதி அற்புதமான விரதமாக கருதப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ‘சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என்ற பழமொழி ஏற்பட்டது. கந்த சஷ்டி விரதம், ஒவ்வொரு வருடமும் தீபாவளி அமாவாசை முடிந்து சுக்லபட்ச பிரதமை திதியில் தொடங்கி, சஷ்டி திதி வரை ஆறு நாட்கள் அனுசரிக்கப்படும். ஆறாவது நாளில்தான் கந்த சஷ்டி கொண்டாடப்படுகிறது. அன்றுதான் முருகப்பெருமான், சூரபதுமனை வதம் செய்த நாள் ஆகும்.

அசுரனான சூரனை வதம் செய்த திருவிளையாடலே கந்த சஷ்டி விழா. சூரபதுமன் ‘நான்’ எனும் அகங்காரத்தாலும், அவனது தம்பிகளான தாரகாசூரன், சிங்கமுகன் ஆகியோர் மாயை மற்றும் கன்மத்தினாலும் வீழ்ந்தனர். இவர்களை கந்தனது ஞானவேல் வென்று உலகில் நீதியை நிலைநாட்டி மக்களை வீடுபேறடைய செய்த நிகழ்வே ‘கந்த சஷ்டி விரதம்’.

கந்தசஷ்டி விரதம் இருக்கும் ஆறு நாட்களும், முருகப்பெருமானின் சிந்தனையைக் கொண்டு சுய ஒழுக்கத்துடன் இருக்கவேண்டும். அதோடு மனதிலுள்ள காமம், குரோதம், உலோபம், மதம், மாச்சர்யம், கோபம், மயக்கம், கஞ்சத்தனம், ஆவல், செருக்கு, பொறாமை ஆகிய தீயகுணங்களை விட்டொழித்து, நற்குணங்களைப் பெறும் நோக்கத்துடன் கடைப்பிடிக்கப்பட்டு வருவதே சஷ்டி விரதத்தின் நோக்கம். விரத நாட்களில் குன்று தோறும் உள்ள முருகன் கோவில்களுக்கு சென்று, மலையை சுற்றி முருக கோஷம் இட்டபடி கிரிவலம் வருவதும் சாலச்சிறந்தது.

ஆறுநாட்களும் முருகனை நினைத்து விரதமிருந்து, ஆறாம் நாளான சூரசம்ஹாரம் தினத்தன்று அதிகாலை எழுந்து நீராடி, தூய உடை உடுத்தி, நெற்றியில் விபூதி, சந்தனம் பூசிக் கொள்ளவேண்டும். பிறகு பூஜை அறையில் முருகப்பெருமானுக்குரிய ஆறுகோண கோலத்தை பச்சரிசி மாவினால் இட்டு ‘சரவணபவ’ எனும் மந்திரம் எழுதி, மங்களத்தை நல்கும் ஐந்து முகவிளக்கேற்றி பூஜைக்கு தயார்படுத்தவேண்டும்.

வீட்டிலுள்ள முருகப்பெருமானின் படம் அல்லது விக்கிரகத்திற்கு தேன், பால், பன்னீர் போன்றவற்றால் அபிஷேகம் செய்து, மஞ்சள், குங்குமத்தால் அலங்கரித்து, வாசனை மிகு வண்ண மலர்களை சூடியும், நறுமணம் கமழும் சாம்பிராணி ஊதுபத்தி ஏற்றியும், சர்க்கரைப் பொங்கலை நைவேத்தியம் செய்ய வேண்டும். அத்துடன் கந்தகுரு கவசம், சஷ்டிக் கவசம் போன்றவைகளுடன் சரண கோஷங் களை எழுப்பியும் இறுதியில் அசுரனான சூரனை அழித்து இன்பம் தந்த முருகப் பெருமானை நினைத்து, தூய பழங்களை வெற்றிலை பாக்குடன் சமர்ப்பித்து, தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தியுடன் வேண்டிய வரத்தைக் கேட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும்.

கந்த சஷ்டி விழாவானது முருகப்பெருமான் குடிகொண்டுள்ள, அனைத்து ஆலங்களிலும் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அவற்றில் முக்கியமானது திருச்செந்தூர் திருத்தலம். இதுதான் சூரபதுமனை, முருகப்பெருமான் வதம் செய்த இடமாகும்.

விரதம் இருக்கும் முறை

விரத நாட்களில் அதிகாலையில் (பிரம்ம முகூர்த்தம்) கண்விழித்து, இயற்கைக் கடன்களை முடித்து, குளித்துவிட்டு தூய்மையான உடல் மற்றும் மனதுடன் திருநீறணிந்து முருக பக்தரான தேவராய சுவாமிகள் இயற்றிய கந்த சஷ்டிக் கவசம் பாடி முருகனை இருகரம் கூப்பித் தொழுது, ஆரத்தி நைவேத்தியம் படைத்துப் பிரார்த்திக்க வேண்டும்.

தொடர்ந்து ஆறுநாட்கள் விரதமிருக்க முடியாதவர்கள், ஆறாம் நாளன்று மட்டுமாவது விரதமிருந்து கந்தனை வணங்கி அடியார்களுக்கு உணவளித்துப் பின் ஒரு நேரம் மட்டும் புசிப்பது நல்லது. நாள் முழுவதும் விரதமிருந்து மதி யம் ஒருவேளை மட்டும் பச்சரிசி சாதத்துடன், தயிர் அல்லது வெல்லம் சேர்த்து உண்ணலாம். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம்.

ராட்சச குணங்களை தூண்டக்கூடிய மசாலாப் பொருட்கள், வெங்காயம் போன்றவைகளை விரத நாட்களில் தவிர்த்து சாத்வீக குணத்தைத் தரக்கூடிய வகையில் உணவுகளை நாம் எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்துடன், ஆன்மிக வெற்றிக்கும் வழிவகுக்கும். வயோதிகர்கள், நோயாளிகள் ஆகியோர் அவரவர் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அதன்படி விரதங்களை கடைப்பிடிக்கலாம்.

விரதம் இருக்கும் ஆறுநாட்களும் முருகன் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதுடன் வீட்டிலேயே கந்தசஷ்டிக் கவசம், திருப்புகழ், சண்முகக் கவசம், கந்த புராணம், சுப்ரமணிய பஞ்ச ரத்னம், கந்தர் அனுபூதி போன்ற முருகன் புகழ்பாடும் நூல்களை பாராயணம் செய்யலாம்.

இவ்விரதத்தின் பலனாக குழந்தைப் பேறு பெற்றவர்கள் எண்ணற்றவர்கள். முழுமனதோடும் நம்பிக்கையோடும் விரதத்தை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு, கண்டிப்பாக முருகப் பெருமானின் அருள் கிடைக்கும் என்பது அநேக மக்கள் தங்கள் அனுபவங்களால் உணர்ந்த உண்மை. குழந்தைப்பேறு மட்டுமின்றி குடும்பப் பிரச்சினைகள் நீங்கவும், வேலைவாய்ப்புகள் பெறவும், கடன், பிணி போன்ற தொல்லைகள் அகலவும் கந்த சஷ்டிவிரதம் பெருமளவு துணை புரிகிறது.
Tags:    

Similar News