செய்திகள்
முதியோர்

உள்ளாட்சி தேர்தல் - 5 லட்சம் முதியோர் ஓட்டுக்களை கவர அதிமுக வியூகம்

Published On 2019-11-09 10:12 GMT   |   Update On 2019-11-09 10:13 GMT
உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக 5 லட்சம் முதியோர்களுக்கு பென்சன் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டு அவர்களது ஓட்டுக்களை கவர அதிமுக வியூகம் வகுத்து வருகிறது.
சென்னை:

உள்ளாட்சி தேர்தலை அடுத்த மாதம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க., பா.ஜனதா, தே.மு.தி.க., த.மா.கா. கட்சிகள் அ.தி.மு.க. தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மாவட்டச் செயலாளர்களை அழைத்து உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசித்துள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலில் கட்சி ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் பிரசாரத்தின் மூலமாகவும் வாக்காளர்களை கவர அ.தி.மு.க. புதிய வியூகம் வகுத்து வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தெருவிலும் முதியோர்கள் கணிசமாக உள்ளனர். இவர்களின் ஓட்டுக்களை முழுமையாக பெற அ.தி.மு.க. புதிய முயற்சி எடுத்துள்ளது. தற்போது இவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித்தொகை பல பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளதால் இவர்களுக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்க அரசு தீவிர முயற்சி எடுத்துள்ளது.

முதியோர் உதவித்தொகை கிடைக்காதவர்கள் முதல்-அமைச்சர் அலுவலகத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் ஏற்கனவே மனு கொடுத்துள்ளனர்.

இதில் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் மட்டும் சுமார் 1½ லட்சம் விண்ணப்பங்கள் வந்திருந்தது.

இந்த மனுக்கள் அனைத்தும் வருவாய்த்துறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் தவிர ஏற்கனவே மாவட்ட அளவிலும், அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் வழியாகவும், ஏராளமானோர் முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பம் கொடுத்திருந்தனர்.

இவர்களின் குடும்ப பின்னணியை அறிந்து, ஆதரவற்று ஏழ்மை நிலையில் இருக்கும் முதியோர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பென்சன் கிடைக்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

இதற்காக 5 லட்சம் முதியோர்களுக்கு பென்சன் கிடைக்க வருவாய்த்துறை ரூ.618 கோடி ஒதுக்கி உள்ளது.

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக இதற்கான உத்தரவை அமல்படுத்த அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே 29 லட்சம் பென்சன்தாரர்கள் உள்ளனர். இதில் முதியோர் பென்சன்தாரர்கள் 13 லட்சம் பேர் உள்ளனர். ஆரம்பத்தில் 500 ரூபாயாக இருந்த பென்சன் தொகையை ஜெயலலிதா ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கினார்.



இப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதியோர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் கூடுதலாக 5 லட்சம் முதியோர்களுக்கு பென்சன் கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இவர்களின் ஓட்டுக்கள் அ.தி.மு.க.வுக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்றும் நம்பிக்கையில் உள்ளனர்.

Tags:    

Similar News