ஆன்மிகம்
உற்சவ திருமேனிகள்

நாகதோஷம் நீக்கும், குழந்தை வரம் அருளும் மண்ணாறசாலை நாகராஜா

Published On 2019-10-19 05:15 GMT   |   Update On 2019-10-19 05:15 GMT
கேரளா மாநிலம் ஆலப்புழாவில் உள்ள மண்ணாறசாலை நாகராஜா கோவிலில் நாகதோஷம் நீங்கவும், குழந்தை வரம் கிடைக்கவும் சிறப்பான பரிகாரங்கள் செய்யப்படுகிறது.
கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஹரிப்பாடு என்ற இடத்தில் மண்ணாறசாலை நாகராஜா கோவில் இருக்கிறது. இந்த ஆலயம் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் சிறப்புமிக்க திருத்தலமாக விளங்கி வருகிறது.

மண்ணாறசாலை நாகராஜா கோவிலில் முக்கிய வழிபாடு ‘உருளி கவிழ்த்தல்’. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள், இந்தக் கோவிலுக்கு வந்து நாகராஜாவையும், சர்ப்ப யக்சி அம்மாவையும் மனமுருக பிரார்த்தனை செய்து நடத்தும் வழிபாடு இது. இதற்காக பல நாடுகளில் இருந்து ஜாதி, மத பேதமின்றி திரளான பக்தர்கள் அனைத்து நாட்களிலும் கோவிலுக்கு வந்து பூஜை - வழிபாடுகளில் பங்கேற்பது சிறப்பு வாய்ந்ததாகும்.

நாக தோஷத்தால், அற்ப ஆயுளும், வம்ச நாசம், தீராத வியாதி, தரித்திரம், மனநிலை பாதிப்பு, துஷ்ட சக்திகளில் தொல்லை போன்றவை ஏற்படலாம். இதனை தீர்க்க நாக தோஷ வழிபாடு அவசியமாகிறது. இது தவிர செல்வ செழிப்புக்கு- தெய்வீகத் தன்மை நிறைந்த பொருட்களுடன் கும்பம் வைத்து வழிபட வேண்டும். அதே போல் கல்வி மற்றும் சுபீட்சமான வாழ்வுக்கு பட்டு சாத்தியும், தானியம், திவ்ய ஆபரணங்கள் பூட்டியும் வழிபடலாம். உடல் நலம் பெற- உப்பு வைத்து வழிபடலாம்.

விஷத்தன்மை நீங்க -மஞ்சள். ஆரோக்கிய வாழ்வு பெற - நல்ல மிளகு, கடுகு, சிறு பயறு. சர்ப்ப தோஷ பரிகாரத்திற்கு - தங்கத்தில் செய்யப்பட்ட புற்று, நாகத்தின் முட்டை, மரம், பூமி போன்ற வடிவங்கள். நீண்ட ஆயுள் பெற - நெய். நினைத்த காரியம் கை கூடுவதற்கு - பால், கதலிப்பழம், நிலவறை பாயசம். குழந்தை பாக்கியம் பெற- மஞ்சள் பொடி. விவசாயம் செழிக்க - பயிர் செய்யும் தானியங்களில் முதன்மையானது என்று தனித்தனியாக நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்ய வேண்டும்.

இந்த ஆலயத்திற்குச் செல்ல ஆலப் புழாவில் இருந்து ஏராளமான பஸ்வசதிகள் இருக்கின்றன.
Tags:    

Similar News