இந்தியா
கோப்புப்படம்

டெல்லியில் வீட்டில் இருந்து வேலை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

Published On 2022-01-11 08:07 GMT   |   Update On 2022-01-11 08:07 GMT
டெல்லியில் இன்னும் இரண்டு நாட்களுக்குள் கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை உச்சத்தை தொடும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில், இன்றைய பாதிப்பு நேற்றைவிட சற்று குறைந்துள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் உருமாற்றம் அடைந்த வைரசால் 3-வது அலை தொடங்கிவிட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், டெல்டா பாதிப்பு போன்று இருக்காது எனவும், உச்சநிலையை அடைய நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளாது எனவும் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

டெல்லியில் 2-வது அலை கொரோனா தொற்று முழுமையாக குறைந்து தினசரி பாதிப்பு 100-க்கும் கீழ் குறைந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக அதிரிக்க தொடங்கியது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை 22,751 ஆக பாதிப்பு எண்ணிக்கை, நேற்று சற்று குறைந்த 19 ஆயிரம் என்ற அளவில் இருந்தது.

இந்த நிலையில் டெல்லியில் வார இறுதி நாட்களில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என அம்மாநிலை சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெய்ன் இடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு சத்யேந்தர் ஜெய்ன் பதில் அளிக்கையில் ‘‘கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலையின் உச்சம் ஏற்கனவே டெல்லியில் வந்துவிட்டது. அல்லது இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் உறுதியாக நிகழும். அதன்பின் தினசரி கொரோனா பாதிப்பு குறையும். மக்கள் தங்களது பாதுகாப்பை குறைத்துவிடக் கூடாது என்பதற்கான ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது’’ என்றார்.



பரிசோதனை செய்வதில் நான்கு பேரில் ஒருவருக்கு கொரேனா பாசிட்டிவ் என்ற நிலை டெல்லியில் உள்ளது. நேற்று பாதிப்பு விகிதம் 25 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு மே 5-ந்தேதிக்குப்பிறகு மிகவும் அதிகாமான பாசிட்டிவ் இதுவாகும்.

இதற்கிடையே கொரோனா பாசிட்டிவ் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து தனியார் நிறுவனங்களும், ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அத்தியாவசிய சேவை எனக் கருதப்படும் நிறுவனங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. தற்போது வரை, 50 சதவீத ஊழியர்களுடன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த முடிவு டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் எடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News