ஆன்மிகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்தை தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது.

மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா தொடங்கியது

Published On 2019-08-27 06:05 GMT   |   Update On 2019-08-27 06:05 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, புரட்டாசி, கார்த்திகை, மாசி, பங்குனி திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. அதிலும் ஆவணி திருவிழாவில் தான் சுந்தரேசுவரர் சுவாமிக்கு பட்டாபிஷேகமும், சுவாமியின் திருவிளையாடலை விளக்கும் திருவிழாவும் நடைபெறும்.

இந்த சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத்திருவிழா நேற்று முன்தினம் வாஸ்து சாந்தியுடன் தொடங்கி, அடுத்த மாதம் 12-ந் தேதி வரை நடக்கிறது. இதற்கிடையே ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றம் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் நேற்று காலை 9.35 மணிக்கு நடைபெற்றது. அங்கு சுந்தரேசுவரர் சுவாமியும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அப்போது சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் நேற்று முதல் 31-ந்தேதி வரை சந்திரசேகர் சுவாமி புறப்பாடு காலை, இரவு ஆகிய இருவேளையும் சுவாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் நடக்கிறது.

இதனையடுத்து வருகிற 1-ந் தேதியில் இருந்து தினமும் திருவிளையாடல்களை விளக்கும் திருவிழா நடக்கிறது. அதில் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 7-ந் தேதி காலை வளையல் விற்ற திருவிளையாடல் நிகழ்ச்சியும், அன்று இரவு சுவாமி சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடக்கிறது. மேலும் 9-ந் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை, 10-ந் தேதி விறகு விற்ற லீலையும் நடக்கிறது.

இந்த திருவிழாவையொட்டி காலை, இரவு என இருவேளையும் சுவாமியும், அம்மனும் ஆவணி மூலவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.

விழாவில் 11-ந் தேதி சட்டத்தேர் புறப்பாடு நடைபெறுகிறது. 12-ந் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News