ஆன்மிகம்
பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்

குயவன்குடி சுப்பையா கோவில் திருவிழா: பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்

Published On 2021-03-30 07:07 GMT   |   Update On 2021-03-30 07:07 GMT
குயவன்குடி சுப்பையா கோவில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மண்டபம் யூனியன் குயவன்குடி கிராமத்தில் உள்ள சுப்பையா கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா நடைபெறுவது வழக்கம். இதன்படி கடந்த 19-ந்தேதி காப்பு கட்டுதலுடன் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது. அப்போது காவடி, பால்குடம், அக்னி சட்டி, அலகு குத்துதல் மற்றும் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டனர். மொத்தம் 10 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதைதொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோவில் கலையரங்கத்தில் பிரம்மகுமாரி ராஜலட்சுமி, குயவன்குடி தளஞ்சியம் சுவாமிகள், தெற்கூர் பெரியசாமி சுவாமிகள், புதுவை தமிழ்ச்சங்க சிறப்புத்தலைவர் நீதியரசர் சேதுமுருகபூபதி, சென்னை லதா கதிர்வேல் ஆகியோரின் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. இரவு முழுவதும் பால்குடங்கள், இளநீர் காவடி, அக்னிசட்டி எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது முருக கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் காவடிகள், அலகு வேல், பறவை காவடி, பால் குடங்கள், இளநீர் காவடி, அக்னி சட்டி எடுத்து வந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் குயவன்குடி கிராம பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில் ஏராளமான போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருப்புல்லாணி அருகே உள்ள தினைக்குளம் சாலையில் அமைந்துள்ள செந்தில்வேல் முருகன் கோவில் பங்குனி திருவிழா கடந்த 19-ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. பங்குனி உத்திரத்தையொட்டி ஏராளமான பக்தர்கள், வேல்காவடி, மயில்காவடி, உள்ளிட்ட பல்வேறு காவடி எடுத்தும், அலகு குத்தியும் முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

பின்னர் நள்ளிரவு கோவில் முன்பாக வளர்க்கப்பட்ட பூக்குழியில் இறங்கி ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து வழிபட்டனர். சுற்று வட்டார கிராமத்தினர் ஏராளமானோர் பங்குனி உத்திர திருவிழாவில் பங்கேற்று முருகனை வழிபட்டனர். விழாவில் அன்னதானமும் நடைபெற்றது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News