செய்திகள்
தனவேலு எம்எல்ஏ.

சோனியாவிடம் புதுவை முதல்வர்- அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் கொடுப்பேன்: காங். எம்எல்.ஏ போர்க்கொடி

Published On 2020-01-12 11:49 GMT   |   Update On 2020-01-12 11:49 GMT
முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் மீது சோனியாவிடம் ஊழல் பட்டியல் கொடுப்பேன் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு திடீரென போர்க்கொடி உயர்த்தி இருப்பது அந்த கட்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி:

புதுவை மாநிலம் பாகூர் தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக தனவேலு இருந்து வருகிறார். சமீப காலமாக அவர் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது புகார் கூறி வந்தார். 4 நாட்களுக்கு முன்பு பாகூர் அரசு ஆஸ்பத்திரியில் போதிய மருந்துகள் இல்லை என்று கூறி போராட்டம் நடத்தினார். அப்போதும் முதல்-அமைச்சரை கடுமையாக விமர்சித்தார்.

இதையடுத்து முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறும்போது, கட்சி மேலிடத்திடம் புகார் தெரிவிப்பேன் என்றார்.

இந்த நிலையில் தனவேலு எம்.எல்.ஏ. சட்டசபையில் உள்ள கமிட்டி அறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வாக மக்கள் என்னை தேர்ந்தெடுத்தார்கள். காங்கிரஸ் அரசு கொண்டு வரும் திட்டங்களை உடனடியாக தொகுதிக்கு கொண்டு வருவார் என்பதுதான் மக்கள் என்னை தேர்ந்தெடுத்ததின் நோக்கமாகும்.

ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு என்னால் எதையும் செய்ய முடியவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு அச்சுறுத்தல்கள் இருந்ததால் காங்கிரஸ் அரசை பற்றியோ, முதல்-அமைச்சர், அமைச்சர்களைப் பற்றி நான் எதுவும் வெளிப்படையாக கூறவில்லை. காங்கிரஸ் ஆட்சி அரசின் துறைகளை முற்றிலுமாக அழித்து வருகிறது.

50, 60 ஆண்டு கால பழமையான பாகூர் அரசு மருத்துவமனை தரத்தை உயர்த்த வேண்டும் என அரசை சந்தித்து வலியுறுத்தினேன். நிதி இல்லாததால் உடனடியாக செய்ய முடியாது, வரும் காலத்தில் பார்க்கலாம் என கூறினர். ஆனால், நான் கூறி 1½ ஆண்டாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

பாகூர் ஆஸ்பத்திரியில் காயம்பட்டு வருபவர்களுக்கு கட்டுக்கட்டுவதற்குகூட துணி கிடையாது. என்னுடைய முத்தாலம்மன் அறக்கட்டளை மூலம் இதுவரை ரூ.25 லட்சத்திற்கு மருந்துகள் வாங்கி கொடுத்துள்ளேன்.

அரசு ஆஸ்பத்திரியின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர், அமைச்சரிடம் நேரடியாக விவாதிக்க தயாராக உள்ளேன். அவர்கள் என்னுடன் விவாதிக்க தயாரா? என்னைப்பற்றி கட்சித் தலைமைக்கு புகார் அனுப்ப போவதாக முதல்- அமைச்சர் கூறியுள்ளார். இதை நான் வரவேற்கிறேன்.

அதேநேரத்தில் முதல்- அமைச்சர், அமைச்சர்களின் ஊழல் பட்டியலை கட்சித் தலைமைக்கு அளிக்க உள்ளேன். முதல்-அமைச்சர் கட்சி தலைமைக்கு கடிதம் தான் எழுதுவார்.

ஆனால், நான் நேரிலேயே கொண்டுசென்று கொடுக்க உள்ளேன். 2021 வரை நாராயணசாமி முதல்- அமைச்சராக தொடர்ந்தால் காங்கிரஸ் வீழ்ச்சியடையும். முதல்-அமைச்சர், அமைச்சர்கள் ஊழல் தொடர்பாக நாள்தோறும் எனக்கு பல புகார்கள் வருகிறது. நான் அவற்றை வெளிப்படுத்துவேன் என நம்பிக்கை வைத்து என்னிடம் கூறுகின்றனர்.

அவர்களின் நம்பிக்கையை பாழடிக்காமல் முதல்- அமைச்சர், அமைச்சர்களின் ஊழலை தோலுரித்து காட்டுவேன். கவர்னர் கிரண்பேடியால் மூடப்பட்ட தனியார் ஜவுளி நிறுவனம் மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதற்கு பணம் கைமாறி உள்ளது. இதுதொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.

இப்போது அந்த ஜவுளி நிறுவனம் திறக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. விதிமுறைக்கு அப்பாற்பட்டு கட்டிய கட்டிடத்தை எப்படி திறக்க முடியும்? இதுதொடர்பாக நகர குழும உறுப்பினர் செயலரிடம் புகார் அளிக்க உள்ளேன்.

வறுமையில் குடும்பம் வாழ்கிறது என்பதற்காக நம் வீட்டு பெண்களை தவறான தொழில் செய்ய அனுமதிப்போமா? நிதிநிலை சரியில்லை என்பதற்காக கேசினோ என்ற சூதாட்டத்தை நாம் அனுமதிக்க முடியுமா? கேசினோவை அனுமதித்தால் நம் கலாச்சாரத்தை, பண்பாட்டை முற்றிலுமாக சீரழித்து விடும். அதனை ஒரு போதும் அனுமதிக்க விடமாட்டேன்.


நான் யாரையும் நம்பி போராட்டம் நடத்தவில்லை. என்னையும், என் தொகுதி மக்களையும் நம்பியே இந்த போராட்டத்தில் ஈடுபடுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆளும் கட்சியில் சொந்த எம்.எல்.ஏ.வே போர்க்கொடி உயர்த்தி இருப்பது காங்கிரஸ் கட்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுவையில் மொத்தம் உள்ள 30 எம்.எல்.ஏ.க்களில் காங்கிரசுக்கு 15 எம்.எல் ஏ.க்களும், கூட்டணி கட்சியான தி.மு.க.வுக்கு 3 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

மேலும் நியமன எம்.எல். ஏ.க்கள் 3 பேர் இருக்கிறார்கள். எனவே, மெஜாரிட்டிக்கு 17 எம்.எல்.ஏ.க்கள் தேவை.

தனவேலு போர்க்கொடி உயர்த்தி இருக்கும் சூழ் நிலையில் அவரை கழித்து விட்டால் காங்கிரசுக்கு 17 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவே இருக்கிறது. இது, சிக்கலை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.

Tags:    

Similar News