செய்திகள்
கோப்புப்படம்

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-12-03 22:05 GMT   |   Update On 2020-12-03 22:05 GMT
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 942 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 3 லட்சத்து 19 ஆயிரத்து 708 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 15 ஆயிரத்து 928 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. 15 ஆயிரத்து 586 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3,398 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. 115 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் நேற்று மேலும் 14 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 942 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,300-க்கும் மேற்பட்டோருக்கு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. அரசு அறிவித்தபடி மாவட்ட சுகாதார துறையினர் பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் நிலை உள்ளது.

மேலும் பாதிப்படைந்த பகுதிகளின் விவரமும் தெரிவிக்கப்படாததால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் நடந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. மாநில சுகாதார துறையின் பட்டியலின்படி மாவட்டத்தில் 356 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற வேண்டிய நிலையில் மாவட்ட சுகாதாரத்துறை 115 பேர் மட்டுமே அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 6 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பாதிப்பு ஏற்பட்ட 255 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்களா அல்லது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரா அல்லது சுகாதாரத் துறையினர் முறையாக கண்காணிக்காததால் அவர்கள் சிகிச்சை ஏதும் பெறாத நிலையில் உள்ளனரா என்ற விவரம் தெரியவில்லை. இந்த நடைமுறை மாவட்டத்தில் குறிப்பாக கிராமப் பகுதிகளில் நோய் பரவலை அதிகரிக்க வாய்ப்பினை ஏற்படுத்தும்.

எனவே மாவட்ட நிர்வாகம் தினசரி நோய் பாதிப்படைந்த பகுதிகளின் விவரங்களை முழுமையாக வெளியிடவும், பாதிப்பு அடைந்தவர்களை சுகாதாரத்துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் தொடக்க காலத்தில் செய்தது போன்று அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு அனுப்பவும் அல்லது வீடுகளில் தனிமைப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

மேலும் பொது இடங்களில் நோய்தடுப்பு விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றவும் உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News