செய்திகள்
தசரா திருவிழாவில் வேடம் அணியும் பக்தர்களுக்கு தலைமுடி தயாரிக்கும் காட்சி

தசரா திருவிழா- வேடம் அணியும் பக்தர்களுக்கு தலைமுடி தயாரிப்பதில் தொழிலாளர்கள் தீவிரம்

Published On 2021-09-17 04:18 GMT   |   Update On 2021-09-17 04:18 GMT
பரமன்குறிச்சி, குலசேகரன்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தலைமுடி தயாரிப்பதிலும் விற்பனை செய்வதிலும் தொழிலாளர்கள் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர்.
உடன்குடி:

தமிழகத்தில் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். பல லட்சம் மக்கள் கூடும் இத்திருவிழா கடந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் இல்லாமல் கொடியேற்றம் நடந்தது.

வழக்கமாக கடற்கரையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெறும் சூரசம்ஹாரம் பக்தர்கள் இல்லாமல் கோவில் முன்பு நடந்தது. இந்த ஆண்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கொடியேற்றம் மற்றும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிகள் பக்தர்கள் இல்லாமல் நடக்கிறது.

வருகிற 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தசரா திருவிழா தொடங்குகிறது. அக்டோபர் 15-ந்தேதி சூரசம்ஹாரம் கோவிலுக்கு முன்பு நடக்கிறது. கோவிலுக்கு வர அரசு தடை விதித்தாலும், நாங்கள் எங்கள் ஊரில் உள்ள பக்தர்கள் தசரா குழு அமைத்து, கரகம், காவடி, நையாண்டி மேளம் இணைத்து ஒவ்வொரு ஊர் ஊராக சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி தசரா திருவிழாவை கடந்த ஆண்டு போல கொண்டாடுவோம் என்று தசரா பக்தர்கள் கூறுகின்றனர்.

தற்போது லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து, சிகப்பு ஆடையணிந்து, தனி நபராகவும் குடும்பத்துடனும் விரதத்தை தொடங்கி விட்டனர். வேடம் அணியும் பக்தர்களுக்கு அதிகமாக தேவைப்படுவது தலைமுடி மட்டும் தான். கடும் விரதமிருந்து காளி வேடம் அணியும் பக்தர்களுக்கு தலைமுடி மிக முக்கியம்.

இதை போல முருகன், கணபதி, லட்சுமி, சரஸ்வதி, சக்தி, அம்மன், ராமர், கிருஷ்ணர், ராஜா, ராணி போன்ற சுவாமி வேடங்கள் என எந்த வேடம் போட்டாலும் பக்தர்களுக்கு தலைமுடி மிக மிக அவசியம். மேலும் குறவன் குறத்தி, விதவிதமான பெண் வேடம் உட்பட எந்த வேடம் போட்டாலும் பக்தர்களுக்கு தலைமுடி தான்தேவை.

இந்த தலைமுடிகளை உருவாக்குவதற்கு ஏராளமான தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஈடுபட்டுள்ளனர். உடன்குடி மேல பஜார், கீழபஜாரில் விதவிதமான தலைமுடி தயாரிப்பதில் தொழிலாளர்கள் அதிகமாக ஈடுபட்டு உள்ளனர்.

பரமன்குறிச்சி, குலசேகரன்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தலைமுடி தயாரிப்பதிலும் விற்பனை செய்வதிலும் தொழிலாளர்கள் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர். ஏராளமான தசரா பக்தர்கள் தங்களது தலை சுற்றளவு கொடுத்து தலைமுடி எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சொல்லி, முன் பணம் கொடுத்த முன் பதிவு செய்துள்ளனர்.



Tags:    

Similar News