செய்திகள்
பணம் பறிமுதல்

பள்ளிகொண்டாவில் ஓட்டுக்கு பணம் கொடுத்த பா.ம.க.வினர் 4 பேர் கைது

Published On 2021-04-05 07:02 GMT   |   Update On 2021-04-05 07:02 GMT
பள்ளிகொண்டா பகுதியிலிருந்த பறக்கும் படை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். அவர்களை கண்டதும் பணம் கொடுத்து கொண்டிருந்தவர்கள் ஒரு காரில் ஏறி தப்பினர்.

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் ஓட்டுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் குறித்த புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பல்வேறு இடங்களில் பணம் மற்றும் வேட்பாளர்கள் பெயர் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று இரவு பள்ளிகொண்டா பகுதியில் அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக பணம் சப்ளை செய்யப்படுவதாக வேலூர் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து பள்ளிகொண்டா பகுதியிலிருந்த பறக்கும் படை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். அவர்களை கண்டதும் பணம் கொடுத்து கொண்டிருந்தவர்கள் ஒரு காரில் ஏறி தப்பினர்.

அந்த கார் வேலூர் நோக்கி வேகமாக வந்தது. பறக்கும் படை அதிகாரிகள் பின்னால் துரத்தி வந்தனர். மேலும் இதுகுறித்து வேலூர் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பள்ளிகொண்டாவில் இருந்து வேகமாக வந்த கார் வேலூர் மக்கான் பகுதிக்கு வந்தது. அப்போது அங்கு தயாராக இருந்தவேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் அந்த காரை மடக்கினர்.

அந்தக் காரில் பா.ம.க. முன்னாள் மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் (வயது 48) சாய்நாதபுரத்தை சேர்ந்த கோபி (24) ஓட்டேரியை சேர்ந்த சதீஷ் (24) ஆகியோர் இருந்தனர்.

மேலும் காரில் ரூ.4 லட்சம் பணம் மற்றும் பா.ம.க துண்டுகள், துண்டு பிரசுரங்கள் இருந்தன.இதுதொடர்பாக கலெக்டர் சண்முகசுந்தரத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டார்.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றி சென்றனர். பா.ம.க.வினர் 3 பேர் மீதும் வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 3 பேரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News