செய்திகள்
மகாத்மா காந்தி மற்றும் சாத்வி பிரக்யா

தேசப்பிதா காந்தியை 'நாட்டின் மகன்' என கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சாத்வி பிரக்யா சிங்

Published On 2019-10-21 16:56 GMT   |   Update On 2019-10-21 16:56 GMT
பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தேசத்தந்தை மகாத்மா காந்தியை 'நாட்டின் மகன்' எனக்கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
போபால்:

பாஜக கட்சியை சேர்ந்த மத்திய பிரதேச மாநிலத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர் பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங். இவர் அம்மாநிலத்தின் போபால் தொகுதி எம்.பி.யாக செயல்பட்டுவருகிறார். இவர் தனது பேச்சு மூலம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம்.

இந்நிலையில், போபாலில் ரெயில்வே தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சாத்வி பிரக்யா,“காந்தி ஜி இந்த தேசத்தின் மகன், அவர் இந்த நிலத்தின் மகன். கடவுள் ராமர், ராஜபுத்திர அரசர் மகாராணா பிரதாப், சிவாஜி மகாராஜா போன்றோரும் இந்த மண்ணின் மகன்கள். இவர்கள் அனைவரும் தேசத்தின் நன்மைக்காக பாராட்டத்தக்க செயல்களை செய்துள்ளனர். நாம் அனைவரும் அவர்களின் பாதையை பின்பற்றவேண்டும்’’ என தெரிவித்தார்.

தேசத்தந்தை மகாத்மா காந்தியை சாத்வி பிரக்யா தேசத்தின் மகன் என மாற்றி கூறிய சம்பவத்திற்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதே போன்று மகாத்மா காந்தியை சுட்டுக்கொலை செய்த நாதுராம் கோட்சே 'ஒரு தேசபக்தர்' என்று கூறி கடந்த மே மாதம் பிரக்யா சிங் சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News