செய்திகள்
மதுபானக் கடையில் கொட்டும் மழையிலும் குடைபிடித்தபடி மதுவாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த மது பிரியர்கள்.

மதுக்கடைகள் திறக்கப்படாததால் கேரள எல்லை மதுக்கடையில் குவிந்த கோவை மதுபிரியர்கள்

Published On 2021-06-18 10:12 GMT   |   Update On 2021-06-18 10:12 GMT
கேரளாவில் உள்ள மதுக்கடையில் கேரளாவை சேர்ந்தவர்களை விட தமிழகத்தை சேர்ந்தவர்களை அதிகளவில் காணப்பட்டனர்.

பொள்ளாச்சி:

கொரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக தமிழகத்தில் கடந்த மாதம் 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 21-ந் தேதி வரை தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதே போன்று கேரள மாநிலத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இருமாநிலங்களிலும் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் தமிழகத்தில் கோவை திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதனால் கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, நெகமம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் அண்டை மாவட்டமான திண்டுக்கல், பழனி, ஒட்டன் சத்திரம் பகுதிகளுக்கு வாகனங்களில் படையெடுத்து சென்று மதுபாட்டில்களை வாங்கி வந்தனர்.

இந்த நிலையில் கேரளாவில் நேற்று முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதுபற்றிய தகவல் அறிந்ததும் பொள்ளாச்சி, நெகமம், கிணத்துக்கடவு பகுதிகளை சேர்ந்த மதுபிரியர்கள், தமிழக- கேரள எல்லையான கோபாலபுரம் பகுதியில் உள்ள மதுபான கடையில் குவிந்தனர். இதனால் அந்த கடையில் கூட்டம் அலைமோதியது. கூட்டம் அதிகமாக இருந்ததால் மதுபிரியர்கள் ஒரு கி.மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து உற்சாகத்துடன் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

கேரளாவில் உள்ள மதுக்கடையில் கேரளாவை சேர்ந்தவர்களை விட தமிழகத்தை சேர்ந்தவர்களை அதிகளவில் காணப்பட்டனர். அந்த சமயத்தில் அங்கு சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. ஆனால் மழையை பொருட்படுத்தாத மதுபிரியர்கள் மதுவாங்கும் உற்சாகத்தில் கொட்டும் மழையிலும் நின்று கொண்டு மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

இப்படி யாராவது கேரள மாநில பகுதிக்குள் செல்கிறார்களா? என்பதை கண்காணிக்க மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆனால் மதுபிரியர்கள் செடிமுத்தூர், நெடும்பாறை, வடக்குகாடு, செமணாம்பதி உள்ளிட்ட பகுதிகளி குறுக்கு பாதைகளில் கேரளாவுக்கு சென்று மது வாங்கி வந்தனர்.

மாவட்டத்தில் கொரோனா பரவலே இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் மதுபிரியர்கள் இப்படி கேரளாவிற்கு மதுவாங்க செல்கின்றனர். அங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் முண்டியடித்து கொண்டு மது வாங்குகின்றனர். இதனால் மாவட்டத்தில் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே போலீசார் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்து வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 

Tags:    

Similar News