வழிபாடு
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சுவரோவியம் புதுப்பிக்கும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வரையப்பட்ட ஓவியம் புதுப்பிக்கும் பணி தீவிரம்

Published On 2022-02-07 06:39 GMT   |   Update On 2022-02-07 06:39 GMT
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த சுவரோவியம் புதுப்பிக்கும் பணி கொரோனா பெருந்தொற்று காரணமாக மூன்று மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
108 வைணவத்திருப்பதிகளில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவிலில் 2004-ம் ஆண்டு கேரளாவைச்சேர்ந்த பிரபல ஜோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கர் தலைமையில் தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ரூ.6.5 கோடி செலவில் திருப்பணிகள் நடந்து வருகிறது.

பழுதடைந்த விளக்கணி மாடங்கள் தனியார் பங்களிப்புடன் ரூ39 லட்சம் செலவில் சீரமைக்கப்படுகிறது.

கோவிலில் உள்ள சுவரோவியம் ரூ.99 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. கோவில் கருவறையில் இருந்து உற்சவ மூர்த்தி சிலைகள் பாலாலயத்திற்கு மாற்றப்பட்டு அங்கு நான்கு ஆண்டுகளாக பூஜைகள் நடந்து வருகிறது. விளக்கணி மாடம் அமைத்தல் வேலை பெரும்பாலானவை முடிவடைந்து விட்டன.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த சுவரோவியம் புதுப்பிக்கும் பணி கொரோனா பெருந்தொற்று காரணமாக மூன்று மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து, ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் சுவரோவியம் புதுப்பிக்கும் பணிகள் கடந்த வாரம் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து கோவிலின் ஓவியர் உண்ணி கூறியதாவது:- ”கருவறையைச்சுற்றியுள்ள சிதலமடைந்த சுவரோவியங்கள் அதன் பழமை மாறாமல் இயற்கை வர்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கப்படுகிறது. புதுதாக ஓவியங்கள் வரைவதற்கு தொல்லியல் துறை கூறவில்லை. பழைய ஓவியங்கள் அதன் தன்மை மாறாமல் அப்படியே புதுப்பித்து வரைந்துகொண்டிருக்கிறோம். சாதாரண ஓவியம் வரைவது போல் சுவரோவியங்கள் வரைய முடியாது. இந்த பணிகள் முடிய மூன்று மாதங்களுக்கு மேலாகும்”

இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது கருவறையின் மேற்கு, வடக்கு, தெற்கு பகுதி ஓவியங்கள் புதுப்பிக்கப்படுகிறது. அதே வேளை கிழக்குப்பகுதியில் முன்னரே ஓவியங்கள் சிதலமடைந்துள்ளதால் கிழக்குப்பகுதியில் சுண்ணாம்பு பூசி வைத்துள்ளனர். மூன்று பகுதிகளில் ஓவியங்கள் இடம்பெறும் போது ஒரு பகுதியில் மட்டும் ஓவியங்கள் இல்லாமல் இருப்பது நல்லதல்ல. எனவே கருவறையின் கிழக்குப்பகுதி சுவற்றிலும் சுவரோவியம் வரைய அறநிலையத்துறை முன்வர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News