செய்திகள்
கல்யான் சிங்

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: உ.பி முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கை விசாரிக்க சிபிஐ மனு

Published On 2019-09-09 17:41 GMT   |   Update On 2019-09-09 17:41 GMT
உத்தர பிரதேச முன்னாள் மந்திரி கல்யாண் சிங்கிடம் பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
லக்னோ:

ராஜஸ்தான் மாநில ஆளுநராக 2014 முதல் 2019 வரை பதவி வகித்தவர் கல்யாண் சிங். இவர் 1991 முதல் 1992 பாஜக கட்சி தலைமையிலான உத்தர பிரதேச மாநிலத்தின் முதல் மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார். அவருடைய ஆளுநர் பதவி காலம் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர் மீண்டும் பாஜக-வில் தன்னை இணைத்துக்கொண்டார். 

இதற்கிடையில், 1992 நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் சதி திட்டம் தீட்டியதாக கல்யாண் சிங் மீது குற்றம் சுமத்தப்பட்டது. மேலும், பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் 2017-ம் ஆண்டு சிபிஐ அதிகாரிகள் கல்யாண் சிங்கை விசாரிக்க முற்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் அவர் ஆளுநராக இருந்ததால் இந்த வழக்கில் இருந்து விலக்கு அளிக்க சட்டத்தில் அனுமதி இருந்தது.



இந்நிலையில், ராஜஸ்தான் மாநில ஆளுநராக இருந்த கல்யாண்சிங்கின் பதவிகாலம் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து அவரிடம் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் விசாரணை மேற்கொள்ள சிபிஐ சிறப்பு நிதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. சிபிஐ தாக்கல் செய்த மனு வரும் 11-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.  

இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி , முரளி மனோகர் ஜோஷி மற்றும் உபா பாரதி உள்ளிட்டோர் ஏற்கனவே குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  
Tags:    

Similar News