செய்திகள்
ரிஷப் பந்த்

வங்காளதேசம் டி20 தொடர்: ரிஷப் பந்துக்கு இடம் கிடைக்குமா?

Published On 2019-10-23 14:36 GMT   |   Update On 2019-10-23 14:36 GMT
வங்காளதேச அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, பும்ராவுக்கு பதில் புது வீரர் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன எம்எஸ் டோனிக்கு மாற்று வீரராக ரிஷப் பந்தை உருவாக்க இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் விரும்புகிறது.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடிய திறமைப் படைத்த ரிஷப் பந்தால் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக விக்கெட் கீப்பிங் தகுதியை வைத்து தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சகாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான வீரர்களின் தேர்வு நாளை நடக்கிறது. இதில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

அதன்பின் ரிஷப் பந்த் நிலை குறித்து பேசப்படும். ஒருவேளை அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு ரிஷப் பந்துக்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டால், வங்காளதேச தொடரில் இடம்பெறுவார்.

இல்லையெனில் அவருக்கு போட்டியாக கருதப்படும் சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. ஒருவேளை சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டால் ரிஷப் பந்துக்கு கடும் நெருக்கடி ஏற்படும். தொடர்ந்து மூன்று வகை கிரிக்கெட்டிலும் அவரால் எளிதாக பங்கேற்க முடியுமா? என்பது சந்தேகம்தான்.

ஹர்திக் பாண்டியா காயத்திற்காக ஆபரேசன் செய்துள்ளதால், அவரால் இடம் பெற முடியாது. ஒருவேளை அணி நிர்வாகம் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் தேவை என்று விரும்பினால், ஷிவம் டுபே தேர்வு செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.



வேகப்பந்து வீச்சில் பும்ரா இல்லை. அவருக்குப் பதிலாக இசாந்த் சர்மா அல்லது நவ்தீப் சைனி சேர்க்கப்படலாம். ஏற்கனவே உமேஷ் யாதவ், முகமது ஷமி உள்ளனர்.

ஒட்டுமொத்தமாக ரிஷப் பந்த் தேர்வு குறித்துதான் அதிக அளவில் விவாதம் நடக்கும் எனத் தெரிகிறது.
Tags:    

Similar News