செய்திகள்
செல்லூர் ராஜூ

அமைச்சர் செந்தில்பாலாஜி நவீன விஞ்ஞானி ஆகிவிட்டார் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டல்

Published On 2021-06-27 10:31 GMT   |   Update On 2021-06-27 10:31 GMT
நான் அமைச்சராக இருந்தபோது என்னை நவீன விஞ்ஞானி என்று தி.மு.க.வினர் சமூக வலை தளங்களில் கிண்டலும் கேலியும் செய்தனர் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரை:

மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி நிர்வாகிகள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ். பாண்டியன், திரவியம், மாணவரணி குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு சிறப்பான திட்டங்களை செய்தோம். ஆனால் மக்கள் தி.மு.க.வினர் அளித்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி தி.மு.க.வுக்கு வாக்களித்து விட்டனர். தி.மு.க.வினர் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியவில்லை.

பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்றார்கள். ஆனால் நிதியமைச்சர் எப்போது குறைப்போம் என்று தேதி சொன்னோமா என்கிறார். குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்குவோம் என்றார்கள். இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு இருக்காது என்றார்கள். ஆனால் இதுவரை எந்த தெளிவான முடிவையும் தி.மு.க. அரசு அறிவிக்கவில்லை. இதனால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நான் அமைச்சராக இருந்தபோது என்னை நவீன விஞ்ஞானி என்று தி.மு.க.வினர் சமூக வலை தளங்களில் கிண்டலும் கேலியும் செய்தனர். இப்போது அந்த இடத்தை நம்முடைய அமைச்சர் செந்தில்பாலாஜி பிடித்துக்கொண்டார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பாடிய பாடல் “நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்” என்பதுபோல இப்போது “நல்லவேளை நான் தப்பித்து விட்டேன்” மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விஞ்ஞானியாக மாறிவிட்டார்.

தமிழகத்தில் ஏற்பட் டுள்ள மின் தடைகளுக்கு அணில்கள்தான் காரணம் என்று ஒரு அரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்து நவீன விஞ்ஞானியாக செந்தில்பாலாஜி மாறியுள்ளார். அவருக்கு ஆஸ்கார், நோபல் பரிசுகளை வழங்கலாம்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அணில்கள் எல்லாம் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டது. தற்போது தி.மு.க. ஆட்சியில் அனைத்து அணில்களும் தமிழகத்துக்கு திரும்பி வந்து மின்சார வயர்களில் பயணித்து வருகின்றன. இது போன்ற அரிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதை விட்டு விட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி மின்தடையை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News