உள்ளூர் செய்திகள்
திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்

வைகுண்ட ஏகாதசி - திருப்பூர் பெருமாள் கோவில்களில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

Published On 2022-01-12 05:37 GMT   |   Update On 2022-01-12 10:45 GMT
திருப்பூர் ஸ்ரீவீரராகப்பெருமாள் கோவிலில் நாளை 13-ந்தேதி வைகுண்ட ஏகாதாசி விழா, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளன. ஸ்ரீரங்கம் கோவிலை பின்பற்றும் சில கோவில்களில் மட்டும் கடந்த கார்த்திகை மாத ஏகாதசியிலேயே சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் நடைபெற்றது.

திருப்பூர் ஸ்ரீவீரராகப்பெருமாள் கோவிலில் நாளை 13-ந்தேதி வைகுண்ட ஏகாதாசி விழா, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 4-ந் தேதி முதல்  பகல்பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது. 

தொடர்ந்து, கூடாரை வெல்லும் உற்சவமும், மோகினி அலங்காரத்தில் எம்பெருமாள் காட்சியளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. நாளை 13-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீவீரராகவப்பெருமாள் உற்சவருக்கு, மகா திருமஞ்சனம் நடைபெறுகிறது. 

தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தாயார்களுடன் எம்பெருமாள் காட்சியளிக்கிறார். தொடர்ந்து, கருடவாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் எம்பெருமாள் சொர்க்கவாசல் வழியாக சென்று நம்மாழ்வார் மற்றும் பக்தர்களுக்கு காட்சியளிக்க இருக்கிறார்.  

கொரோனா பாதுகாப்பு கட்டுப்பாடுகளை பின்பற்றி விழாவை நடத்திட கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இதேப்போல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது. இதையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 
Tags:    

Similar News