ஆன்மிகம்
நைனாமலை பெருமாள் கோவில்

நைனாமலை பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை

Published On 2021-09-17 06:11 GMT   |   Update On 2021-09-17 09:03 GMT
நைனாமலை பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் தொடங்கியதும் சனிக்கிழமைதோறும் புரட்டாசி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
சேந்தமங்கலத்தில் இருந்து புதன்சந்தை செல்லும் வழியில் வரலாற்று புகழ் வாய்ந்த நைனாமலையில் பெருமாள் கோவில் உள்ளது. இந்த மலை கோவிலுக்கு செல்ல அடிவாரத்தில் இருந்து சுமார் 3 ஆயிரம் படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டும்.

நைனாமலை பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் தொடங்கியதும் சனிக்கிழமைதோறும் புரட்டாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அப்போது ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்று பெருமாள் மற்றும் குவலயவள்ளி தாயாரை தரிசனம் செய்வார்கள். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த திருவிழா ரத்து செய்யப்பட்டது.

கொரோனா பரவலால் இந்த ஆண்டும் நைனாமலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் ஆலயங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் நைனாமலை கோவிலிலும் அந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி கோவில் நிர்வாக அதிகாரி லட்சுமி காந்தன் சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில் விண்ணப்பம் ஒன்று கொடுத்துள்ளார். அதில், நைனாமலை கோவிலுக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் அங்கு செல்வதை தவிர்க்க பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக முக்கிய இடங்களில் விளம்பர பலகை வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புரட்டாசி மாதம் தொடங்கியவுடன் சனிக்கிழமை காலையிலேயே மலைமேல் உள்ள பெருமாளை தரிசனம் செய்வதற்காக வெளி மாவட்டத்தில் இருந்து வரும் பக்தர்கள் அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் முந்தைய நாளே வந்து தங்குவார்கள். தற்போது கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News