செய்திகள்
நயினார் நாகேந்திரன்

ரஜினியுடன் கூட்டணி அமைப்பது குறித்து பரிசீலிப்போம்- நயினார் நாகேந்திரன்

Published On 2020-09-14 07:44 GMT   |   Update On 2020-09-14 07:44 GMT
ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்தால் அவருடன் கூட்டணி அமைப்பது குறித்து பரிசீலிப்போம் என்று பா.ஜனதா மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

விருதுநகர்:

விருதுநகர் மேற்கு மாவட்ட பா.ஜனதா செயற் குழு கூட்டம் சாத்தூரில் நடந்தது. கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீட் தேர்வை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தமிழக மாணவர்கள் பிற மாநில மருத்துவக் கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு கிடைக்கும். மாணவ-மாணவிகள் தற்கொலைக்கு நீட் தேர்வு மட்டுமே காரணம் ஆகாது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு பிரச்சினையை கையில் எடுத்திருப்பது தேவையற்றது. 8 மாதங்களுக்கு பிறகு நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அவர் சொல்லி வருகிறார். இது எப்படி என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.

நீட் தேர்வு விவகாரத்தால் பா.ஜனதாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தேர்தல் வெற்றிக்கு கூட்டணியும், தேர்தல் அறிக்கையும் மிக முக்கியம்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்தால் அவருடன் கூட்டணி அமைப்பது குறித்து பரிசீலிப்போம். நடிகர் விஷால் பா.ஜனதாவுக்கு வந்தால் ஏற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News