உலகம்
ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை வழங்க இந்தியா முடிவு

பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை ஏற்றுமதி - இந்தியா நடவடிக்கை

Published On 2022-01-29 07:57 GMT   |   Update On 2022-01-29 09:40 GMT
ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்க, கோதுமை கொள்முதல் மற்றும் போக்குவரத்தை ஏற்பாடு செய்வதற்கான செயல்முறை தற்போது நடைபெற்றுறு வருகிறது.
இஸ்லாமாபாத் :

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஆப்கானிஸ்தான் தலிபான் ஆட்சியின் கீழ் இருந்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் உணவின்றி உயிரிழக்கும் அபாயம் நீடிப்பதாக ஐ.நா.சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் ஆப்கானில் நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காண, தடையில்லா மனிதாபிமான உதவிகளை வழங்க இந்தியா முயற்சித்து வருகிறது. 

பாகிஸ்தான் வழியாக சாலை போக்குவரத்து மூலம் ஆப்கானிஸ்தானுக்கு 50,000 டன் கோதுமை மற்றும் மருந்துகளை அனுப்புவதாக ஏற்கனவே இந்தியா அறிவித்துள்ளது.  இதற்கு பாகிஸ்தான் இந்தியாவிற்கு அனுமதி வழங்கியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் இருந்த போதிலும் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் ஒத்துழைக்க இரு தரப்பினரும் பல வாரங்கள் விவாதித்து ஒப்புக்கொண்டனர். 



இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலக செய்தித் தொடர்பாளர் அசிம் இப்திகார் அகமது செய்தியாளர்களிடம் கூறுகையில், அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றும், முதல் சரக்கு வருவதற்கான தேதிக்காக பாகிஸ்தான் காத்திருப்பதாகவும் கூறினார். 

ஆப்கானிஸ்தானுக்கான மனிதாபிமான உதவி குறித்து டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, உணவு தானியங்கள், கோவிட் தடுப்பூசிகள் மற்றும் அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள் அடங்கிய மனிதாபிமான உதவிகளை ஆப்கானிஸ்தான் மக்களுக்கு வழங்க அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது என்றார். 

கடந்த சில வாரங்களில், 3.6 டன் மருத்துவ உதவியும், 5,00,000 டோஸ் கோவிட் தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். கோதுமை கொள்முதல் மற்றும் அதன் போக்குவரத்தை ஏற்பாடு செய்வதற்கான செயல்முறை தற்போது நடந்து வருகிறது என்று தெரிவித்தார். 

இந்நிலையில் அடுத்த மாதம் ஆப்கானிஸ்தானுக்கு இந்திய சார்பில் கோதுமை அனுப்பும் பணி தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 
Tags:    

Similar News