செய்திகள்
பயிற்சியில் இந்திய வீரர் ரோகித் சர்மா - பயிற்சிக்கு வரும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச்

முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்

Published On 2020-01-14 04:57 GMT   |   Update On 2020-01-14 04:57 GMT
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று நடக்கிறது.
மும்பை:

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கிறது.

விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இந்த மாதத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. ஒருநாள் போட்டியில் இந்திய அணி கடைசியாக 2-1 என்ற கணக்கில் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது. அந்த வெற்றி நம்பிக்கையுடன் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த உலக கோப்பை அரைஇறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு வெளியேறிய பிறகு ஆஸ்திரேலிய அணி களம் காணும் முதல் ஒருநாள் போட்டி இதுவாகும். பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை அடுத்தடுத்து வென்ற உற்சாகத்துடன் ஆஸ்திரேலிய அணி இந்த போட்டி தொடரில் களம் காணுகிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் நடந்த ஒருநாள் போட்டி தொடரில் முதல் 2 ஆட்டங்களில் தோல்வி கண்ட ஆஸ்திரேலிய அணி சரிவில் இருந்து மீண்டு கடைசி 3 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று 3-2 என்ற கணக்கில் தொடரை தனதாக்கியது. முந்தைய ஒருநாள் போட்டி தொடரில் ஆஸ்திரேலியாவிடம் கண்ட தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

இந்திய அணியில் ரோகித்சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் ஆகிய 3 தொடக்க ஆட்டக்காரர்கள் உள்ளனர். ஷிகர் தவான், ரோகித் சர்மா ஆகியோர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக செயல்படக்கூடியவர்கள். நல்ல பார்மில் இருக்கும் லோகேஷ் ராகுல் 3-வது வரிசையில் களம் இறக்கப்படுகிறார். 3 தொடக்க வீரர்களும் அணியில் இடம் பெறுகையில் தனது வரிசையில் மாற்றி பின்னால் இறங்க தயார் என்று கேப்டன் விராட்கோலி தெரிவித்து இருக்கிறார். விராட்கோலி பேட்டிங்கில் அசத்துவார் என்பதில் சந்தேகமில்லை. லோகேஷ் ராகுல் விக்கெட் கீப்பர் பணியையும் கவனிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரேயாஸ் அய்யர், கேதர் ஜாதவுக்கு அணியில் இடம் அளிக்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, ஷர்துல் தாகூர், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இடம் பெறுவார்கள். ஆல்-ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா இடம் பிடிக்கிறார். வேகப்பந்து வீச்சாளர்களில் முகமது ஷமி அல்லது நவ்தீப் சைனி இடம் பெறுவார் என்று தெரிகிறது. குல்தீப் யாதவ் ஒரு விக்கெட் கைப்பற்றினால் ஒருநாள் போட்டியில் 100 விக்கெட்டுகள் இலக்கை எட்ட முடியும்.

ஆஸ்திரேலிய அணியும் பேட்டிங், பந்து வீச்சில் வலுவாக உள்ளது. பேட்டிங்கில் கேப்டன் ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர், முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித், சமீபத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த லபுஸ்சேன் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகியோர் அச்சுறுத்தலாக இருப்பார்கள். டேவிட் வார்னர் இந்த போட்டியில் 10 ரன்கள் எடுத்தால் ஒருநாள் போட்டியில் வேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெறுவார். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகள் சாய்த்தால் 100 விக்கெட்டுகளை எட்டுவார்.

சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை நேருக்கு நேர் 11 ஒருநாள் போட்டி தொடர்களில் மோதி இருக்கின்றன. இதில் ஆஸ்திரேலியா 6 தொடரிலும், இந்தியா 5 தொடரிலும் வெற்றி கண்டுள்ளன. இரு அணிகளும் இன்று மோதுவது 138-வது ஒருநாள் போட்டியாகும்.

இதுவரை நடந்த 137 போட்டிகளில் இந்திய அணி 50 ஆட்டத்திலும், ஆஸ்திரேலிய அணி 77 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 10 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது. இரு அணிகளும் கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடந்த உலக கோப்பை லீக் போட்டியில் சந்தித்தன. இதில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட்கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி அல்லது நவ்தீப் சைனி, ஜஸ்பிரித் பும்ரா.

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி, ஆஷ்டன் அகர், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், ஆடம் ஜம்பா. 
Tags:    

Similar News