தமிழ்நாடு
நிரம்பிய நிலையில் உள்ள வேய்ந்தான்குளத்தின் அழகிய காட்சி

2 நாட்களுக்கு பிறகு நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மீண்டும் இடியுடன் கனமழை

Published On 2021-12-03 05:57 GMT   |   Update On 2021-12-03 05:57 GMT
மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை வினாடிக்கு 1,137 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர்மட்டம் நேற்றைவிட 1 அடி உயர்ந்து இன்று காலை 114.90 அடியாக உள்ளது.
நெல்லை:

நெல்லை, தென்காசி, மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை குறைந்து வெயில் அடித்தது. இந்த நிலையில் நேற்று இரவு நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மீண்டும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி, முக்கூடல் பகுதிகளில் நேற்று இரவு திடீரென்று இடி-மின்னலுடன் கனமழை கொட்டியது. சேரன்மகாதேவி பகுதியில் தொடர்ந்து 3 மணி நேரம் மழை பெய்தது.

இதனால் அந்தபகுதியில் சாலைகளில் ஆறுபோல தண்ணீர் ஓடியது. கனமழை காரணமாக சேரன்மகாதேவி பகுதியில் சுமார் 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. மழை குறைந்ததும் மின்வாரிய அதிகாரிகள் நள்ளிரவில் விரைந்துவந்து மின்தடையை சரிசெய்தனர்.

முக்கூடல், சுத்தமல்லி பகுதிகளிலும் நீண்ட நேரம் கனமழை பெய்ததால் சாலைகளில் ஆறுபோல வெள்ளம் ஓடியது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் சற்று குறைந்துள்ளதால், சாலைகளில் ஓடிய வெள்ளம் இன்று உடனடியாக வடிந்துவிட்டது.

ஒருசில தாழ்வான பகுதிகளில் மட்டும் தண்ணீர் தேங்கி உள்ளது. நாங்குநேரி, வள்ளியூர், களக்காடு பகுதிகளிலும் கன மழை பெய்தது.

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி மற்றும் ஆலங்குளம் பகுதிகளில் உள்ள கிராமப் புறங்களிலும் நேற்று கனமழை பெய்தது. இடி-மின்னலுடன் பெய்ததால் பொதுமக்கள் வெளியில் வர அஞ்சினர்.

மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் கனமழையும், சாரல் மழையும் மாறிமாறி பெய்தது. சங்கரன்கோவில், சிவகிரி பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.

எனவே நாளை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பாபநாசம் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 2,087 கனஅடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,638 கனஅடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது. அணைநீர்மட்டம் 138.45 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 143.54 அடியாக உள்ளது.

மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை வினாடிக்கு 1,137 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர்மட்டம் நேற்றைவிட 1 அடி உயர்ந்து இன்று காலை 114.90 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நிரம்பும் நிலையை அடைந்ததால், அணை பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து கண்காணித்து வருகிறார்கள்.

கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு அடவிநயினார், நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகள் அனைத்தும் நிரம்பிய நிலையில், அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்துவிடப்படுகிறது.

இந்த ஆண்டு இதுவரை நிரம்பாத வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் இன்று 46.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 216 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

Tags:    

Similar News