ஆன்மிகம்
ஹாசனாம்பா கோவில்

ஹாசனாம்பா கோவில் நடை திறப்பு: கலெக்டர் தலைமையில் ஆலோசனை

Published On 2020-10-22 01:54 GMT   |   Update On 2020-10-22 01:54 GMT
தீபாவளி பண்டிகைக்கு மட்டும் திறக்கப்படும் ஹாசனாம்பா கோவில் நடை திறப்பு குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை நடந்தது.
ஹாசன் :

ஹாசன் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் உள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி இந்த கோவில் திறக்கப்படும். அதாவது 10 நாட்களும் பூஜை, அலங்காரங்களுடன் வெகுவிமரிசையாக நடக்கும். அப்போது வெளிமாநிலம், பிறமாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இங்கு வருவார்கள்.

அதுபோல் நடப்பு ஆண்டு (2020) ஹாசனாம்பா கோவில் நடை நவம்பர் மாதம் 5-ந்தேதி தொடங்கி 17-ந்தேதி திறக்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக ஹாசனம்பா கோவில் விழா எளிமையாக கொண்டாடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. அத்துடன் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவிலுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதற்கு மாறாக ஆன்லைன் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்தநிலையில் ஹாசனாம்பா கோவில் விழா தொடர்பாக நேற்று ஹாசன் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிரீஷ் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஹாசனாம்பா கோவில் நடை திறப்பை முன்னிட்டு எடுக்க வேண்டிய முன்எச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதில் தீபஅலங்காரங்கள், புஷ்ப அலங்காரங்கள், கோவில் நாலாபுறம், முக்கிய வீதிகளில் பொதுமக்கள் சாமி தரிசனம் பார்ப்பதற்கு அகன்ற திரை வைப்பது, தடுப்பு வேலிகள் அமைப்பதற்கான டெண்டர் விடும்படி கோவில் நிர்வாகத்தினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசகவுடா பேசுகையில், கொரோனா பரவலால் ஹாசனாம்பா கோவில் விழா எளிமையாக கொண்டாடப்பட உள்ளது. அதை உணர்ந்து பொதுமக்கள் ஆன்லைனில் சாமி தரிசனம் செய்து கொள்ள வேண்டும். எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாதபடி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்றார்.
Tags:    

Similar News