செய்திகள்
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவி கிரிஜா

கும்பகோணம் அருகே 11 -ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி

Published On 2019-11-05 10:47 GMT   |   Update On 2019-11-05 10:47 GMT
கும்பகோணம் அருகே பள்ளி கட்டணம் கட்டாததால் 11 ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம்:

கும்பகோணம் அடுத்த வலங்கைமான் அருகே கீழ அமராவதி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகதாஸ். விவசாய கூலி தொழிலாளி, இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் 2-வது மகள் கிரிஜா (வயது 16). இவர் வலங்கைமானில் உள்ள தனியார் பள்ளியில் 11 -ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கல்வி கட்டணம் ரூ.20 ஆயிரம் செலுத்தாததால் பள்ளிக்கூட தலைமையாசிரியர் கடந்த இரு தினங்களாக திட்டியதாக தெரிகிறது.

இந்தநிலையில் மனமுடைந்த கிரிஜா, இன்று காலை வீட்டில் வைத்து அரளி விதையை அரைத்துக் குடித்தார். பின்னர் சிறிதுநேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாணவியின் தந்தை முருகதாஸ் கூறியதாவது:-

எனது மகள் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது கல்வி கட்டணம் ரூ.20 ஆயிரம் செலுத்தவில்லை. மேலும் நான் கூலி தொழிலாளியாக இருப்பதால் வருமானம் குறைவாக இருந்தது. மேலும் தீபாவளி பண்டிகை முடித்துவிட்டு கல்விக்கட்டணம் செலுத்தி விடலாம் என மகளிடம் கூறினேன். ஆனால் பள்ளி நிர்வாகம் எனது மகளை பள்ளியில் 2 மணி நேரம் வெளியே நிறுத்தி மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளனர்.

இதனால் வேதனை அடைந்த எனது மகள் அரளி விதையை அரைத்து குடித்துள்ளார். தற்போது கும்பகோணம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News