ஆன்மிகம்
சபரிமலை ஐயப்பன் கோவில்

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

Published On 2021-02-13 04:35 GMT   |   Update On 2021-02-13 04:35 GMT
மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. 5 நாட்கள் பூஜை நடக்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசன் மற்றும் திருவிழா நாட்கள் தவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்து, சாமிக்கு தீபாராதனை காட்டினார். மற்ற பூஜைகள் நடைபெறவில்லை. இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது.

இன்று (சனிக்கிழமை) முதல், சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.

மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அதைத்தொடர்ந்து படி பூஜை நடைபெறும். இரவு 8.50 மணிக்கு நடை அடைக்கப்படும், இந்த பூஜை 17-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும்.

கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனாவை கருத்தில் கொண்டு, ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் ஆன்லைனில் முன்பதிவு செய்த ஐயப்ப பக்தர்கள், தரிசனத்திற்கு வரும் போது, 48 மணி நேர இடைவெளியில் எடுக்கப்பட்ட கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். அல்லது ஆர்.டி. லேப் மருத்துவ பரிசோதனை செய்ததற்கான நெகட்டிவ் சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.

மாத பூஜை காலங்களில் தினசரி 15 ஆயிரம் பக்தர்களை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று தேவஸ்தானம் கோரிக்கை வைத்தது. கொரோனா தொற்றை கருத்தில் கொண்டும், சுகாதார துறையின் பரிந்துரையை ஏற்றும் தேவஸ்தானத்தின் கோரிக்கையினை அரசு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News