செய்திகள்
வைகோ

கோவையில் திட்டமிட்டு நடத்திய வன்முறையை தமிழகம் மன்னிக்காது - வைகோ கண்டனம்

Published On 2021-04-02 10:40 GMT   |   Update On 2021-04-02 10:40 GMT
யோகி ஆதித்ய நாத், கோவை மாநகருக்கு தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது, திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள வன்முறைகளை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை:

ம.தி.மு.க. பொதுaச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அருகே மாதவச்சேரியில், நேற்று நள்ளிரவு ஒரு நாசகார கும்பல் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு நெருப்பு வைத்திருக்கிறது.

அண்ணாவின் சிலை மீது மூடப்பட்டிருந்த துணி எரிந்து, சிலை கருகி இருக்கிறது. இந்த இழிவான செயலில் ஈடுபட்ட காவிக்கும்பலைக் கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா சிலைகளை அவமதிக்கும் போக்கு தொடர்வதற்கு சனாதனக் கும்பல்களின் தூண்டுதலே காரணமாகும். அமைதிப் பூங்காவாக உள்ள தமிழ்நாட்டில், நச்சு விதைகளைத் தூவி, தேர்தலில் அறுவடை பெற்றுவிடலாம் என்ற மதவாத சனாதனக் கூட்டத்தின் முயற்சி தவிடு பொடி ஆகும்.

உத்திரப் பிரதேச முதல்-அமைச்சர் யோகி ஆதித்ய நாத், கோவை மாநகருக்கு தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது, திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள வன்முறைகளை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். சட்டமன்றத் தேர்தலில் தக்க பதிலடியைத் தருவார்கள்.


நம் தாயகத்திற்கு, ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா சிலைக்குத் தீ வைத்த கூட்டம்தான், ‘தட்‌ஷணப் பிரதேசம்’ என பெயரை மாற்றுவோம் என்று கொக்கரிக்கிறது.

இத்தகைய நாசகார கூட்டத்திற்கு துணை நிற்பவர்களையும் தமிழக மக்கள் முற்றாகத்துடைத்து எறிவார்கள். சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அதைக்காட்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News