உள்ளூர் செய்திகள்
ஊட்டி மார்லிமந்து அணையில் நீர்மட்டம் உயர்ந்து இருப்பதை காணலாம்

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழையால் 5 அணைகள் நிரம்பின

Published On 2021-12-16 10:29 GMT   |   Update On 2021-12-16 10:29 GMT
நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழையால் 5 அணைகள் நிரம்பின. ஊட்டியில் அடுத்த ஆண்டு கோடை சீசன் நடந்தாலும் தங்கும் விடுதிகள் மற்றும் குடியிருப்புகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை சராசரியை விட அதிகமாக பெய்து உள்ளது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் தொடர்ந்து தீவிரமாக மழை பெய்தது. இதனால் ஊட்டியில் உள்ள அணைகள் மற்றும் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணைகள் மற்றும் நீர் நிலைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

குறிப்பாக ஊட்டி நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் பார்சன்ஸ்வேலி அணை, மார்லி மந்து, டைகர்ஹில், கோரிசோலா, தொட்டபெட்டா அப்பர் உள்பட 10 அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து உள்ளது. அதுபோன்று 39 அடி கொள்ளளவு கொண்ட டைகர்ஹில் அணை நிரம்பியதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல் கோடப் பமந்து அப்பர், தொட்டபெட்டா லோயர், கிளன்ராக் உள்பட 4 அணைகளும் நிரம்பின.

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டில் ஊட்டி அணைகளில் நீர்மட்டம் அதிகமாக உள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

50 அடி உயரம் கொண்ட ஊட்டி பார்சன்ஸ்வேலி அணையின் நீர்மட்டம் 45 அடியாகவும், 23 அடி கொள்ளளவு கொண்ட மார்லிமந்து அணையின் நீர்மட்டம் 18.5 அடியாகவும், 31 அடி உயரம் கொண்ட தொட்டபெட்டா அப்பர் அணையின் நீர்மட்டம் 25 அடியாகவும் அதிகரித்து இருக்கிறது.

இதுதவிர 5 அணைகளும் நிரம்பி உள்ளன. எனவே ஊட்டியில் அடுத்த ஆண்டு கோடை சீசன் நடந்தாலும் தங்கும் விடுதிகள் மற்றும் குடியிருப்புகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News