ஆன்மிகம்
சிவன் பார்வதி

இன்னல்கள் போக்கும் கார்த்திகை ‘சோமவாரம்’: விரதம் இருப்பது எப்படி?

Published On 2020-11-30 03:33 GMT   |   Update On 2020-11-30 03:33 GMT
சோமவாரத்தில் செய்யும் வழிபாடு அனைத்துமே சிறப்பானது என்றாலும், கார்த்திகை மாதத்தில் வரும் சோம வாரங்கள் பிரசித்திப்பெற்றதாக விளங்குகிறது.
சிவபெருமானை திங்கட்கிழமைகளில் வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். திங்கட்கிழமையை ‘சோமவாரம்’ என்றும் குறிப்பிடுவார்கள். ‘சோம’ என்பதற்கு ‘பார்வதி உடனாய சிவபெருமான்’ என்றும், ‘சந்திரன்’ என்றும் பொருள். சோமவாரத்தில் செய்யும் வழிபாடு அனைத்துமே சிறப்பானது என்றாலும், கார்த்திகை மாதத்தில் வரும் சோம வாரங்கள் பிரசித்திப்பெற்றதாக விளங்குகிறது.

ஒரு முறை சாபத்தின் காரணமாக சந்திரன் தேய்ந்து போனான். அந்த சாபம் நீங்க, சிவபெருமானை நினைத்து தவம் இருந்தான், சந்திரன். அதன் பயனாக அவன் சாபம் நீங்கப்பெற்றான். மேலும் நவக்கிரகங்களில் ஒருவராகும் வாய்ப்பையும் பெற்றான். அவன் பெயரில் உருவானதே சோமவார விரதமாகும். இந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு துன்பங்கள், பாவங்கள் விலகுவதுடன், நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.

இந்து சமய திருமணங்களில் அருந்ததி பார்ப்பது என்று ஒரு நிகழ்வு உண்டு. கற்புக்கரசியான அந்த அருந்ததி தேவியை வசிஷ்ட முனிவர் தன் வாழ்க்கைத் துணைவியாக பெற்றது, சோமவார விரதத்தை கடைப்பிடித்துதான். எனவே பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து நல்ல வாழ்க்கைத் துணையை அடையலாம்.

கார்த்திகை மாத சோமவாரங்களில், அனைத்து சிவாலயங்களிலும், இறைவனுக்கு சங்காபிஷேகம் செய்யப்படும். கார்த்திகை மாதத்தில் இறைவன் அக்னிப் பிழம்பாக இருப்பதாக ஐதீகம். எனவே அவரைக் குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்யப்படுகிறது.

கார்த்திகை திங்கட்கிழமையான சோமவாரத்தில், கணவனும் மனைவியும் ஆலயங்களுக்குச் சென்று வருவது உத்தமம். அதனால் சிவசக்தியின் ஆசி கிடைத்து, காலம் முழுவதும் அந்தத் தம்பதியர் கருத்து வேறுபாடின்றி இணைந்திருப்பார்கள்.

இது தவிர கார்த்திகை மாதத்தில் செய்யப்படும் எந்த பூஜையாக இருந்தாலும், அது பன்மடங்கு பலன் அளிக்கக்கூடியதாகும். அந்த பூஜைகளால் பாவங்கள், வறுமை விலகி, வளமான வாழ்வு அமையும். கார்த்திகை மாதத்தில் ஸ்ரீமன் நாராயணர், ஒவ்வொருவர் வீட்டில் உள்ள நீரிலும் எழுந்தருள்வதாக ஐதீகம். கார்த்திகை மாதத்தில் கஸ்தூரி மஞ்சளால் அபிஷேகம் செய்து, தாமரை மலரால் அர்ச்சனை செய்தால், மகா விஷ்ணுவுடன் லட்சுமிதேவி நம் வீட்டில் நிரந்தரமாகத் தங்கிவிடுவாள். வில்வ இலையால் சிவனை பூஜிப்பவர்களுக்கு முக்தி கிடைக்கும். கார்த்திகை மாதத்தில் சாளக்கிராமத்தை துளசியால் அர்ச்சிப்பவர்கள், வைகுண்டம் செல்லும் பாக்கியத்தை அடைவர்.

விரதம் இருப்பது எப்படி?

இந்த விரதத்தை ஆண், பெண் இருவரும் கடைப்பிடிக்கலாம். இந்த வழிபாட்டுக்காக மஞ்சள்பொடி, குங்குமம், சந்தனம், பூமாலை, உதிரிப் பூக்கள், வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி, சாம்பிராணி, பஞ்சு, நல்லெண்ணெய், கற்பூரம், வெல்லம், மாவிலை, வாழைப் பழம், அரிசி, தேங்காய், தயிர், தேன், தீப்பெட்டி, பூணூல், வஸ்திரம், அட்சதை (பச்சரிசியுடன் மஞ்சள்பொடி கலந்தது), பஞ்சாமிர்தம், திராட்சை, கல்கண்டு, சர்க்கரை கலந்த பசுவின்பால் ஆகியவற்றை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ராகு காலத்துக்கு முன்பே பூஜையை தொடங்கவேண்டும். அதிகாலையில் விநாயகர் பூஜை செய்து சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டவேண்டும். கலசத்தில் தண்ணீர் பிடித்து அதில் நாணயம், மஞ்சள்பொடி கலந்து கலசத்துக்கு மேலே மாவிலைக்கொத்தை செருகி, மையத்தில் மஞ்சள் தடவிய தேங்காயை வைத்து சந்தனம், குங்குமத்தால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் பூஜையை தொடங்க வேண்டும்.

சாதம், நெய், பருப்பு, பாயசம், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்க வேண்டும். தொடர்ந்து சிவநாமங்களைச் சொல்ல வேண்டும். பூஜை முடிந்த பிறகு, வயதான தம்பதியரை பார்வதி - பரமேஸ்வரனாக நினைத்து சந்தனம், குங்குமம் அளித்து நமஸ்காரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு தட்சணையும் அளிக்க வேண்டும். உணவு பரிமாறி, அட்சதையை அவர்கள் கையில் கொடுத்து வணங்கி ஆசி பெற வேண்டும்.

Tags:    

Similar News