ஆன்மிகம்
சபரிமலை ஐயப்பன் கோவில்

சபரிமலையில் மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை 15-ந்தேதி திறப்பு

Published On 2021-11-05 06:51 GMT   |   Update On 2021-11-05 06:51 GMT
இந்த ஆண்டு மண்டல பூஜை நாட்களில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பக்தர்கள் சபரிமலைக்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

இந்த விழாக்களில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பிரச்சினை காரணமாக பக்தர்கள் வருகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பிரச்சனை குறைந்து வருவதால் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மண்டல பூஜை நாட்களில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பக்தர்கள் சபரிமலைக்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை வருகிற 15-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றிலிருந்து மண்டல பூஜை நடைபெறும் டிசம்பர் 26-ந் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

நேற்று முன்தினம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை ஆட்ட திருநாள் விழா நடந்தது. அன்று மாலை சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் களப அபிஷேகம் கலசாபிஷேகம் ஆகியவை நடந்தன. அன்று இரவு 9 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது.

இதற்கிடையே கேரளாவில் பெய்துவரும் தொடர் மழையால் சபரிமலைக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. இதுபோல சபரி மலையிலும் மழையால் சேதம் ஏற்பட்டுள்ளது. மண்டல பூஜை தொடங்க இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் கேரள பொதுப்பணித்துறை அமைச்சர் முகமது ரியாஸ் மற்றும் ஐ.ஏ.எஸ் .அதிகாரிகள் சபரிமலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

பத்தனம்திட்டா, கொல்லம் ,எர்ணாகுளம், கோட்டயம் ஆகிய பகுதிகளிலிருந்து சபரிமலைக்கு செல்லும் சாலைகளில் மேற்கொள்ளவேண்டிய சீரமைப்பு பணிகள், பம்பை மற்றும் சன்னிதானத்தில் பக்தர்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய அடிப்படை வசதிகள் ஆகியவற்றை அதிகாரிகள் குழு ஆய்வு செய்தனர். இது தொடர்பான அறிக்கை வருகிற 7-ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.
Tags:    

Similar News