செய்திகள்
ரங்கசாமி

மழை சேதம்: மத்திய அரசிடம் நிவாரண நிதி கேட்க விபர அறிக்கை- அதிகாரிகளுக்கு ரங்கசாமி உத்தரவு

Published On 2021-11-12 08:49 GMT   |   Update On 2021-11-12 12:24 GMT
பருவமழை காலத்திலும் குடியிருப்பு வாசிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மழைநீர் தேங்க வடிகால்கள் தூர்வாரப்படாதது முக்கிய காரணமாக உள்ளது.

புதுச்சேரி:

புதுவையில் பருவமழை காலங்களில் நகர பகுதியில் தொடர்ந்து வெள்ள நீர் சாலைகளில் தேங்குகிறது.

இந்திராகாந்தி, சிவாஜி சிலை சதுக்கம், புஸ்சி வீதி உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் தேங்குவதால் போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

இதேபோல பல ஆண்டுகளாக பாவாணர் நகர், நடேசன் நகர், கிருஷ்ணாநகர், வெங்கட்டா நகர், ரெயின்போ நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைவெள்ளம் தேங்கி வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து விடுகிறது.

இதனால் ஒவ்வொரு பருவமழை காலத்திலும் குடியிருப்பு வாசிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மழைநீர் தேங்க வடிகால்கள் தூர்வாரப்படாதது முக்கிய காரணமாக உள்ளது.

அதேநேரத்தில் பல இடங்களில் அரசு இடங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதும் தண்ணீர் வெளியேற வழியில்லாத நிலையை உருவாக்கி உள்ளது.

இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இத்தகைய சூழலில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி, அரசு அதிகாரிகளுடன் சட்டமன்ற வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

அரசு செயலர்கள் வல்லவன், விக்ராந்த்ராஜா, கலெக்டர் பூர்வா கார்க், இயக்குனர்கள் சக்திவேல், முத்துமீனா, பாலாஜி, சப்-கலெக்டர்கள் கந்தசாமி, ரிஷிதாகுப்தா, நகராட்சி ஆணையர்கள் சிவக்குமார், சுரேஷ்ராஜ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் லோகேஸ்வரன், ராகுல் அலுவால் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் தொடர் மழையால் புதுவை, காரைக்காலில் ஏரி, குளங்கள் நிரம்பியிருப்பது, மழை அளவு ஆகியவை குறித்து அதிகாரிகள் விளக்கினர். அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ரங்கசாமி கேட்டறிந்தார்.

தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பயிர் சேதம், சாலைகள் சேதம் குறித்து அதிகாரிகள் தெரிவித்தனர். வழக்கமாக மழைவெள்ளம் தேங்கும் பகுதிகளில் வரும் காலத்தில் தண்ணீர் தேங்காதவாறு நிரந்தரமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மழை நிவாரணம் பெற புதுவை, காரைக்காலில் ஏற்பட்டுள்ள பயிர், சாலை உட்பட அனைத்து துறையின் சேத விபரங்களை உடனடியாக அறிக்கையாக தயார் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி பேசும்போது, வெள்ள வடிகால்களை கட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதனால் தான் இந்திராகாந்தி சதுக்கத்தில் உடனடியாக தண்ணீர் வடிந்தது. அடுத்த பருவமழைக்குள் நகர பகுதியில் வெள்ள நீர் தேங்காததவாறு அனைத்து பணிகளும் முடிக்கப்படும் என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்... சென்னையில் 40 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன

Tags:    

Similar News