செய்திகள்
மத்திய அரசு

புலம்பெயர் தொழிலாளர் குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

Published On 2021-01-11 00:03 GMT   |   Update On 2021-01-11 00:03 GMT
கொரோனாவால் புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
புதுடெல்லி:

கொரோனாவால் பள்ளி குழந்தைகளின், குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் பாதிக்கப்படுவதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய கல்வி அமைச்சகம் பல்வேறு சிபாரிசுகளை வகுத்துள்ளது.

அதுகுறித்து மத்திய கல்வி அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மாநில அரசுகள், பள்ளி செல்லா குழந்தைகளை அடையாளம் காண வீடு வீடாக கணக்கெடுக்க வேண்டும். 6 முதல் 18 வயது வரை உள்ள அத்தகைய குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விரிவான வியூகம் வகுக்க வேண்டும்.

கொரோனா தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்தும் அபாயம் உள்ளது. அதுபோன்று, படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்க ‘பெயில்’ ஆக்கும் விதிமுறைகளை தளர்த்த வேண்டும். அவர்களுக்கு உரிய நேரத்தில் சீருடை, பாடப்புத்தகங்கள் மற்றும் மதிய உணவு கிடைக்கச் செய்ய வேண்டும்.

கற்றல் இழப்பை தடுக்க ஆன்லைன் கல்வி வசதியை அதிகரிக்க வேண்டும். டி.வி., வானொலி மூலம் கற்கும் வாய்ப்பையும் பெருக்க வேண்டும். நடமாடும் வகுப்பறைகள் நடத்தும் யோசனையையும் பரிசீலிக்க வேண்டும்.

நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படும்போது மாணவர்கள் எளிதில் அதனுடன் ஒத்துப்போகும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். பாடத்திட்டத்துக்கு அப்பாலும் மாணவர்கள் படிப்பதற்கும், எழுதுவதற்கும் தயார்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News