செய்திகள்
புழல் ஏரி

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயரவில்லை

Published On 2019-08-20 05:15 GMT   |   Update On 2019-08-20 05:15 GMT
நீர்பிடிப்பு பகுதிகளில் 5 நாட்கள் மழை பெய்த போதிலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டம் உயராமல் காட்சியளித்து வருகிறது.
சென்னை:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 5 நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த 15-ந்தேதியில் இருந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

கடந்த 15-ந்தேதி தாமரைப்பாக்கம் ஏரி நீர்பிடிப்பு பகுதியில் 67 மி.மீ., ஊத்துக்கோட்டை பகுதியில் 47 மி.மீ., கொரட்டூர் அணைக்கட்டு பகுதியில் 9 மி.மீ., என்ற அளவில் மழை பெய்தது. பூண்டி நீர்பிடிப்பு பகுதியில் 27 மி.மீ., சோழவரம் 58 மி.மீ., புழல் 37 மி.மீ. மற்றும் செம்பரம்பாக்கம் 19 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

16-ந்தேதி புழல் ஏரி நீர்பிடிப்பு பகுதிகளில் 4 மி.மீ., செம்பரம்பாக்கம் 2 மி.மீ., அளவில் மட்டும் மழை பெய்தது. தொடர்ந்து 17-ந்தேதி ஊத்துக்கோட்டை பகுதியில் அதிகபட்சமாக 50 மி.மீ. அளவில் மழை பெய்துள்ளது. இதனையடுத்து கொரட்டூர் அணைக்கட்டு பகுதியில் 49 மி.மீ மழை பதிவானது. தாமரைப்பாக்கத்தில் 34 மி.மீ, பூண்டி நீர்பிடிப்பு பகுதியில் 36 மி.மீ., சோழவரம் பகுதியில் 28 மி.மீ., புழல் பகுதியில் 18 மி.மீ., மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் 16 மி.மீ., மழையும் பெய்து உள்ளது.

18-ந்தேதி பூண்டியில் 20 மி.மீ., புழல் 6 மி.மீ., சோழவரம் 8 மி.மீ., செம்பரம்பாக்கம் 40 மி.மீ. மழை பெய்தது. இதேபோல் கொரட்டூர் அணைக்கட்டு பகுதியில் 47 மி.மீ., தாமரைப்பாக்கத்தில் 12 மி.மீ., ஊத்துக்கோட்டையில் 6 மி.மீ., அளவில் மழை பதிவானது. 19-ந்தேதி பூண்டியில் 21 மி.மீ., புழல் 40 மி.மீ., சோழவரம் 52 மி.மீ., செம்பரம்பாக்கம் 32 மி.மீ. என்ற அளவில் மழை கொட்டியுள்ளது.

இதேபோல் கொரட்டூர் அணைக்கட்டு பகுதியில் 19 மி.மீ., தாமரைப்பாக்கத்தில் 5 மி.மீ., ஊத்துக்கோட்டையில் 2 மி.மீ., அளவில் மழை பெய்து உள்ளது. இவ்வாறு கடந்த 5 நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை கொட்டிய போதிலும் மேற்கண்ட ஏரிகளில் எதிர்பார்த்த அளவு தண்ணீர் நிரம்பவில்லை.

பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 அணைகளிலும் சேர்த்து மொத்தம் 16 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வந்தபோதிலும் ஏரிகளில் நீர்மட்டம் எதிர்பார்த்த அளவுக்கு உயராதது தண்ணீரை எதிர்நோக்கி காத்திருக்கும் சென்னை மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து உள்ளது. மழை பெய்தும் ஏரிகளில் ஏன் நிரம்பவில்லை? முறையாக தூர்வாரப்படவில்லையா? என கேள்வி எழுப்பப்படுகிறது. செ.மீ அளவில் தொடர்ந்து மழை பெய்தால் தான் ஏரிகளில் ஓரளவு தண்ணீர் தேங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். தற்போது மி.மீ. அளவில் மழை பெய்வதால் ஏரிகளில் எதிர்ப்பார்த்த தண்ணீர் நிரம்பவில்லை.

இதேபோன்று தொடர்ந்து மழை குறைவாக பெய்தால் மேற்கண்ட ஏரிகளில் நீர்மட்டம் உயர வாய்ப்பே இல்லை. தற்போது பெய்து வரும் மழையில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டாலும், வரவிருக்கும் வடகிழக்கு பருவ மழை காலத்தில் கண்டிப்பாக 4 ஏரிகளிலும் அதிகபட்சமாக தண்ணீர் தேக்கி வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அத்துடன் கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை ஆகிய ஏரிகளை இணைத்து புதிதாக அமைக்கப்படும் ஏரியும் திறக்கப்பட்டு தண்ணீர் தேக்கி வைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News