செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

ஹத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்துக்கு சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2020-10-28 00:53 GMT   |   Update On 2020-10-28 00:53 GMT
ஹத்ராசில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட தலித் இளம்பெண்ணின் குடும்பத்துக்கும், சாட்சிகளுக்கும் சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

உத்தரபிரதேசத்தின் ஹத்ராசில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட தலித் இளம்பெண்ணின் குடும்பத்துக்கும், சாட்சிகளுக்கும் சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, இந்த வழக்கின் விசாரணையை அலகாபாத் ஐகோர்ட்டே கண்காணிக்கும் என அறிவித்து உள்ளது.


உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது தலித் இளம்பெண் ஒருவரை உயர்சாதி வாலிபர்கள் 4 பேர் சேர்ந்து கடந்த மாதம் 14-ந் தேதி கொடூரமாக கற்பழித்ததுடன், அவரை பலமாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த இளம்பெண் 29-ந் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இளம்பெண்ணின் உடலை அவரது குடும்பத்தினரின் ஒப்புதலின்றி போலீசாரே அவசர அவசரமாக தகனம் செய்து விட்டதாக தெரிகிறது. இதுவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த கற்பழிப்பு, கொலை சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக இந்த கொடூரம் தொடர்பாக அலகாபாத் ஐகோர்ட்டு தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்துக்கும், சாட்சிகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், இந்த விசாரணையை உத்தரபிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடுத்தனர். இதைப்போல இந்த சம்பவத்தை சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பின் கீழ் விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதில் மனுதாரர்களின் கோரிக்கைகளுக்கு மாநில அரசு சார்பில் பதில் மனுவும் பிரமாணபத்திரமாக தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் நேற்று தீர்ப்பு வழங்கினர். இதில் அவர்கள் கூறியதாவது:-

ஹாத்ராஸ் சம்பவம் தொடர்பாக நியாயமான விசாரணையை உறுதி செய்ய அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ கிளை தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. ஐகோர்ட்டின் இந்த விசாரணையில் தலையிட வேண்டிய அவசியம் எழவில்லை.

இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணையை அலகாபாத் ஐகோர்ட்டு கண்காணிப்பதே சரியாக இருக்கும். சி.பி.ஐ. மேற்கொண்டு வரும் விசாரணை மற்றும் இளம்பெண்ணின் உடலை சட்டவிரோதமாக எரித்ததாக தெரிவிக்கப்படும் புகார்கள் மீதான விசாரணை உள்ளிட்டவற்றை அலகாபாத் ஐகோர்ட்டின் முடிவுக்கு விட்டு விடுகிறோம்.

இந்த விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டு அவ்வப்போது பிறப்பிக்கும் உத்தரவுக்கு ஏற்ப சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

பலியான இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கும், சாட்சிகளுக்கும் இன்றிலிருந்து ஒரு வார காலத்துக்குள் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) வீரர்களைக் கொண்டு பாதுகாப்பு வழங்க உத்தரவிடுகிறோம்.

இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரித்து வருவதால் எவ்வித அச்ச உணர்வும் தேவையில்லை. இருப்பினும், உத்தரபிரதேசத்தில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நடைபெறும் விசாரணையை தேவைப்படும்பட்சத்தில் எதிர்காலத்தில் டெல்லிக்கு மாற்றுவது குறித்த முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர்.

அத்துடன் அந்த வழக்குகளின் விசாரணைகளையும் அவர்கள் முடித்து வைத்தனர்.
Tags:    

Similar News