செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

சென்னையில் 21 தெருக்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகம்

Published On 2021-06-14 10:45 GMT   |   Update On 2021-06-14 10:45 GMT
சென்னையில் தொற்று பரவாமல் தடுக்க காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடத்திடவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னை:

கொரோனா 2-வது அலை மே மாதம் உச்சத்தில் இருந்தது. இதனால் தொற்று பாதிப்பில் உயிர் இழப்பும் அதிகரித்தது. மே 9-ந்தேதி 725 தெருக்களில் 10 பேருக்கு மேல் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் இருந்ததாக மாநகராட்சி புள்ளி விவரம் தெரிவிகின்றது.

ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. 10 பேருக்கு மேல் பாதிப்பு 21 தெருக்களில் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் இறுதியில் இந்த எணணிக்கை 375 ஆக இருந்தது. மே மாதம் இறுதியில் இது 365 ஆக குறைந்தது.

15 மண்டலங்களில் பெருங்குடி, வளசரவாக்கம், திருவொற்றியூர், ராயபுரம் ஆகிய 4 மண்டலங்களில் 10 பேருக்கு மேல் கொரோனா பாதித்தவர்கள் யாரும் இல்லை என தெரிய வந்துள்ளது.

மாதவரம் வள்ளுவர் தெரு, தண்டையார்பேட்டை வ.உ.சி. நகர் மார்க்கெட், திரு.வி.க.நகர் பேரக்ஸ் ரோடு, அம்பத்தூர், முகப்பேர் ஜஸ்வந்த்நகர், தேனாம்பேட்டை ராஜா அண்ணாமலைபுரம், கோடம்பாக்கம்-ஆற்காடுரோடு, அடையாறு- வேளச்சேரி மெயின் ரோடு, இந்திரா நகர் 11-வது குறுக்கு தெரு, சோழிங்கநல்லூர்-கிராம நெடுஞ்சாலை ஆகிய தெருக்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

சென்னையில் தற்போது 6 முதல் 10 பேர் வரை பாதிக்கப்பட்ட தெருக்கள் 204, 3 முதல் 5 பேர் வரை பாதிக்கப்பட்ட தெருக்கள் 899 என மாநகராட்சி சுகாதாரத்துறை புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

ஏப்ரல் 29-ந்தேதி 6 முதல் 10 பேர் வரை 993 தெருக்களில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. 3 முதல் 5 பேர் வரை பாதிக்கப்பட்டவர்கள் 899 தெருக்களும், அண்ணா நகரை தொடர்ந்து தேனாம்பேட்டையில் பாதிப்பு அதிகமாக இருந்தது. 6 முதல் 10 பேர் வரை பாதிக்கப்பட்ட 38 தெருக்கள் தேனாம்பேட்டையில் இருந்தன.

சூளைமேடு நெடுஞ்சாலை, ஆண்டர்சன் ரோடு, பள்ளி ரோடு, மூர்ஸ் ரோடு, டி.டி.கே.ரோடு, சி.பி. ராமசாமி ரோடு பகுதிகளில் தொற்று பாதிப்பு அதிகமாக இருந்தது.

அரசின் தீவிர தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையால் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. ஆனாலும் சென்னையில் தொற்று பரவாமல் தடுக்க காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடத்திடவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்பு உள்ளவர்கள் பட்டியல் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 3-வது அலை வந்தால் அதனை சந்திக்கவும் தயாராக உள்ளது.

காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் தன்னார்வலர் மூலம் வீடு வீடாக கண்டறிவதன் மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News