ஆன்மிகம்
பயன் தரும் அத்தி மரமாக இருங்கள்

பயன் தரும் அத்தி மரமாக இருங்கள்

Published On 2021-04-28 05:03 GMT   |   Update On 2021-04-28 05:03 GMT
இயேசு பிறக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பரலோகத் தந்தையால் தேர்ந்துகொள்ளப்பட்ட தீர்க்கதரிசியாகிய மோசே, கடவுளால் வாக்களிக்கப்பட்ட தேசத்தை ‘அத்தி மரங்களுள்ள தேசம்’ என வருணித்தார் (உபாகமம் 8:8).
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பூர்வ இஸ்ரவேலில், திராட்சைக் கொடிகளைப் போலவே நிலப்பரப்பின் கலாசாரக் கருப்பொருட்களில் ஒன்றாக இருந்தது அத்தி மரம். அது சுட்டெரிக்கும் கோடையில் நிழல் தரும் மரமாகவும் இருந்ததால் அத்தி மரங்களைச் சாலைநெடுகிலும் நிழலுக்காக நட்டு வளர்க்கும் வழக்கமும் இருந்தது. அதேபோல் திராட்சைத் தோட்டங்களின் வரப்புகளில் அத்தி மரங்கள் நடப்பட்டன. வயலில் வேலை செய்பவர்கள் இளைப்பாறுவதற்கு ஏற்ற தருவாக அத்தி மரம் இருந்தது. விவிலியத்தில் அத்தி மரம் பற்றி குறிப்பிட்டுள்ளதையும், அத்திமரம் புத்திபுகட்டும் தகவல்களையும் காணலாம்.

இயேசு பிறக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பரலோகத் தந்தையால் தேர்ந்துகொள்ளப்பட்ட தீர்க்கதரிசியாகிய மோசே, கடவுளால் வாக்களிக்கப்பட்ட தேசத்தை ‘அத்தி மரங்களுள்ள தேசம்’ என வருணித்தார் (உபாகமம் 8:8).

அதேபோல “அத்தி மரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சைச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவ மரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவி யாமற்போனாலும்; நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்” (ஆபகூக் 3:17) என ஆபகூக் தீர்க்கதரிசி பரலோகத் தந்தை மீதான தன் விசுவாசத்தை வெளிப்படுத்தினார்.

அதேபோல ஆட்சியாளர்களுக்கும், பழைமைவாதிகளுக்கும் பயப்படாத கடவுளுக்கு உண்மையாயிருந்த யூதர்களை நல்ல அத்திப் பழங்களுள்ள ஒரு கூடை என்றார் எரேமியா. ஆனால், சிறைபிடிக்கப்பட்டவர்களில் சுயநலத்தை எண்ணி நாப்பிறழ்ந்தவர்களை சாப்பிட முடியாத கெட்ட அத்திப் பழங்கள் என்றார். “அவற்றை தூக்கியெறியத்தான் வேண்டியிருந்தது”(எரேமியா 24:2) என்றார்.

விவிலியம் முழுவதும் காணப்படும் அத்திமரமும் அதன் பழங்களும் இயேசுவின் பார்வையில் இன்னும் ஒருபடி மேலாகப் பளிச்சிட்டன.

யூதேயா தேசத்திடம் கடவுள் பொறுமையாக இருந்ததை இயேசு அத்திமர உவமையின் வழியாகச் சுட்டிக் காட்டினார். திராட்சைத் தோட்டத்தில் விளைச்சல் அற்ற அத்தி மரத்தை வெட்டி எறியச் சொன்ன உவமையை இயேசு சொன்னார்.

அத்தி மரம் பற்றிய ஒரு விவிலிய எடுத்துக்காட்டில் திராட்சை தோட்டத்தின் உரிமையாளர் ஒருவர் தன் தோட்டத் தொழிலாளியிடம் “இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிக் களைத்தேன்; ஒரு கனியைக்கூட அது என் கண்களுக்குக் காட்டவில்லை, இதை வெட்டிப்போடு, இது வளமான நிலத்தைக் கெடுக்கும் களைபோல் உள்ளது”(லூக்கா 13:6) என்று கூறியிருக்கிறார்.

ஆனால், அந்தத் தோட்டக்காரனோ, “எஜமானே இந்த வருடம் மரத்தைச் சுற்றிலும் கொத்தி, எருப் போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப் போடலாம்” (லூக்கா 13:8) என்று சொன்னான்.

இயேசு அத்திமர உவமையைச் சொன்ன காலத்தில் அவர் ஏற்கனவே மூன்று ஆண்டுகளாக யூதேயா தேசத்தாருக்கு பிரசங்கித்து, பரலோகத் தந்தை மீதான அவர்களுடைய விசுவாசத்தை பலப்படுத்த பாடுபட்டுவந்தார். ஆனால் யூதேயா மேசியாவைப் புறக்கணித்தும் தனது சொந்த மக்களாலேயே இயேசு கைவிடப்பட்டதும் வரலாறாகிவிட்டது. ஆன்மிக ரீதியாக யூதேயா தேசம் மோசமான நிலைக்குச் சென்றுவிட்டதை விளக்கவே இயேசு அத்தி மரத்தை பயன்படுத்தினார்.

அவர் வாதைமிகுந்த தனது மரணத்தை எதிர்கொள்வதற்கு நான்கு தினங்களுக்கு முன், பெத்தானியாவிலிருந்து எருசலேமுக்கு வரும் வழியில் இலைகள் நிறைந்திருந்த ஒர் அத்தி மரத்தைக் கண்டார்; ஆனால் அதில் பழங்களே இல்லை. அது பயனற்ற மரம் என்பதைக் காட்டியது (மாற்கு 11:13). என்றாலும் கனிகளற்ற அந்தமரம் செழிப்பாக காட்சியளித்தது. அதைப்போலவே யூதேயா தேசமும் ஆன்மிகத்தில் செழித்திருப்பதுபோல ஒரு மாயத் தோற்றத்தைத் தந்தது. ஆனால் அது கடவுளுக்கேற்ற கனியைக் கொடுக்கவில்லை.

பரலோகத் தந்தையின் சொந்த குமாரனையே புறக்கணித்துவிட்டது. கனியற்ற அத்தி மரத்தை இயேசு சபித்தார், அடுத்த நாள் அந்த மரம் பட்டுப்போய் இருப்பதை அவரது சீடர்கள் கண்டு அதிர்ந்தார்கள். ‘‘இறைமக்களாக தேர்ந்தெடுத்த யூதர்களைக் கடவுள் நிராகரித்து விடுவார் என்பதற்குப் பட்டுப்போன அந்த மரம் பொருத்தமான அடையாளமாக இருந்தது’’ (மாற்கு 11:20) என்கிறார் மாற்கு.

இத்தகைய அத்தி மரங்கள் தற்காலத்திற்கும் புத்தி புகட்டும் ஒன்றாகவே காற்றில் அசைந்தாடுகிறது.

Tags:    

Similar News