ஆன்மிகம்
மலை மீது இருக்கும் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலை படத்தில் காணலாம்.

அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரோப்கார் வசதி செய்யப்படுமா?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

Published On 2021-09-15 03:03 GMT   |   Update On 2021-09-15 03:03 GMT
கோவை அருகே உள்ள அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரோப்கார் வசதி செய்யப்படுமா என்று பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
வடக்கே குரு விருட்சமலை, தெற்கே அனுவாவி மலை, மேற்கே கடலரசி மலை என்று 3 பக்கமும் மலைகளால் சூழப்பட்ட இயற்கை எழில் கொஞ் சும் மலைப்பகுதியில் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. கோவையில் இருந்து ஆனைக்கட்டி செல்லும் சாலையில் 18 கி.மீ. தூரம் சென்றால் சின்னதடாகம் என்ற பகுதி உள்ளது. இங்கிருந்து இடதுபுறம் திரும்பி 2 கி.மீ. தூரம் சென்றால் இந்த கோவில் இருக்கும் மலைப்பகுதியை அடையலாம். மலையடிவாரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு படிக்கட்டு வழியாக கோவிலுக்கு செல்லலாம். வேகமாக சென்றால் முக்கால்மணி நேரத்தில் செல்லலாம். ஓய்வு எடுத்தபடி சென்றால் ஒருமணி நேரம் ஆகும்.

இந்த கோவில் ராமாயண கால தொடர்பு உடையது. அதாவது இலங்கையை ஆண்ட ராவணன், சீதையை கடத்தி சென்று சிறை வைத்திருந்தான். தனது மனைவியை மீட்க ராமபிரான் ராவணனுடன் போர் புரிந்தபோது, ராவணனின் மகனால் விடப்பட்ட நாகாஸ்திரம் தாக்கி லட்சுமணன் மூர்ச்சையாகி போனான். அவரை காப்பாற்ற சஞ்சீவி மலையில் உள்ள அரிய மூலிகை தேவைப்பட்டது. அதை கொண்டு வர அனுமான் அனுப்பி வைக்கப்பட்டார். மூலிகையை பறிக்க நேரம் ஆகும் என்பதால் அந்த மலையை பெயர்த்து எடுத்து கொண்டு அனுமான் பறந்து சென்றார். செல்லும் வழியில் அவருக்கு தாகம் ஏற்பட்டது. அப்போது அவர் முருகப்பெருமானை வேண்ட, அவர் தனது வேல் கொண்டு ஒரு சுனையை உருவாக்கி அனுமனின் தாகத்தை தீர்த்ததாக தலவரலாறு சொல்கிறது. இங்கு அனுமார் தீர்த்தம் உள்ளதால் இந்த பகுதி அனுமார்வாவி என்று அழைக்கப்பட்டு, நாளடைவில் மருவி அனுவாவி என்று அழைக்கப்பட்டு வருகிறது.

அடிவாரத்தில் இருந்து 586 படிக்கட்டுகள் ஏறி கோவிலை அடைந்து சாமி தரிசனம் செய்யலாம். கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். ஆஞ்சநேயர் வடக்கு நோக்கி அருள் பாலிக்கிறார்.

சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண கோலத்தில் காட்சியளிப்பதால், திருமணம் ஆகாதவர்கள் இங்கு சென்று வேண்டினால் உடனடியாக திருமணம் ஆகும் என்றும், குழந்தை இல்லாதவர்கள் வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும், இங்குள்ள அனுமன் குளத்தில் அதிகாலையில் குளித்தால் சகல நோயும் உடனடியாக குணமாகும் என்ற ஐதீகமும் உண்டு.

இதுதவிர மாதந்தோறும் கிருத்திகை, செவ்வாய், ஞாயிறு உள்பட பல நாட்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. இதனால் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால் படிக்கட்டுகள் செங்குத்தாக இருப்பதாலும், காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாலும் இங்கு செல்ல பக்தர்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இதைத்தடுக்க கோவிலில் ரோப்கார் வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பக்தர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக உள்ளது. இது குறித்து அனுவாவியை சேர்ந்த அருள்குமார் கூறியதாவது:-

மிகவும் புகழ்பெற்ற இந்த கோவில் இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பகுதியில் உள்ளது. இதை சுற்றுலா சார்ந்த ஆன்மிக பகுதியாக அறிவித்தால் இன்னும் அதிகம்பேர் வருவார்கள். மேலும் அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகள் செங்குத்தாக இருக்கிறது.

இதனால் வயதானவர்கள் நடந்து செல்ல சிரமம் இருக்கிறது. அதுபோன்று செல்லும் வழியில் படிக்கட்டுகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உண்டு. எனவேதான் இங்கு ரோப்கார் வசதி வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பயனாக பழனி முருகன் கோவிலில் ரோப்கார் அமைத்த குழுவினர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது ரோப்கார் அமைக்க சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் ரூ.3 கோடி செலவாகும் என்றும் அறிவித்துவிட்டு சென்றனர். அதுபோன்று கடந்த ஜனவரி மாதம் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோதும், ரோப்கார் வசதி அமைக்க சாத்தியக் கூறுகள் இருப்பதாக தெரிவித்தனர். எனவே அனைத்து சாத்தியக்கூறுகள் இருப்பதால் உடனடியாக இங்கு ரோப்கார் வசதியை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, சமீபத்தில் இந்த கோவிலுக்கு வந்த அமைச்சர் சேகர்பாபுவிடம் ரோப்கார் தொடர்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு அவர் முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று ரோப்கார் அமைக்க சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார்.

எனவே உடனடியாக அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றனர்.

இது குறித்து ரோப்கார் வல்லுனர் குழுவை சேர்ந்த ரங்கசாமி என்பவர் கூறியதாவது:-

அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரத்தில் இருந்து 80 மீட்டர் உயரத்தில் மலை மீது உள்ளது. எனவே அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு 400 மீட்டர் தூரத்துக்கு ரோப்கார் அமைக்கலாம். இதற்காக 2 தூண்கள் அமைக்க வேண்டும்.

இந்த ரோப்கார் மூலம் அடிவாரத்தில் இருந்து அதிகபட்சமாக 3 நிமிடத்தில் கோவிலுக்கு சென்றுவிடலாம். இதற்காக ரூ.6 கோடி வரை செலவாகும். இதற்காக நிதி ஒதுக்கப்பட்டு, வனத்துறை அனுமதி கொடுத்தால் ஒரு ஆண்டுக்குள் பணியை முடித்து விடலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News