செய்திகள்
தலிபான் தலைவர்கள்

குற்றங்கள் செய்தால் அந்த தண்டனை உறுதி- தலிபான்களின் அதிர்ச்சி அறிவிப்பு

Published On 2021-09-25 07:00 GMT   |   Update On 2021-09-25 07:00 GMT
எங்களது முந்தைய ஆட்சியில் நிறைவேற்றியதைபோல மத சட்டங்களின் கீழ் கடுமையான தண்டனைகள் இந்த முறையும் வழங்கப்படும் என்று ஆப்கானிஸ்தான் சிறைத்துறை பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
காபூல்:

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து அங்கு தலிபான்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி புதிய அரசாங்கத்தை அமைத்து உள்ளனர். அங்கு ‌ஷரியத் சட்டப்படி ஆட்சி நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குற்றங்கள் செய்தால் கை-கால்கள் வெட்டுதல் போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர். முன்பு தலிபான்கள் ஆட்சியில் இருந்தபோது இதுபோன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வந்தன.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் நாட்டின் சிறைத்துறை பொறுப்பாளர் முல்லா நூருதீன் துராபி கூறியதாவது:-

எங்களது முந்தைய ஆட்சியில் நிறைவேற்றியதை போல மத சட்டங்களின் கீழ் கடுமையான தண்டனைகள் இந்த முறையும் வழங்கப்படும். மரண தண்டனைகள், கை-கால்களை வெட்டுதல் போன்ற தண்டனைகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.



நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய உறுப்புகளை துண்டிக்கும் தண்டனை மிகவும் அத்தியாவசியமானது. 1990-ம் ஆண்டுகளில் இந்த தண்டனைகள் பொது இடங்களில் நிறைவேற்றப்பட்டன.

இந்த தடவை பொதுமக்கள் முன்னிலையில் இல்லாமல் தனி இடங்களில் தண்டனைகள் நிறைவேற்றப்படலாம். முன்பு பொது இடங்களில் மரண தண்டனை நிறைவேற்றுவது குறித்து சர்வதேச அளவில் சர்ச்சை எழுந்தது தேவை இல்லாதது. எங்களது சட்டம் என்னவாக இருக்க வேண்டும் என்று யாரும் எங்களுக்கு சொல்லத்தேவை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

முந்தைய தலிபான்கள் ஆட்சியின்போது நிதித்துறை அமைச்சராக இருந்த துராபி இசையை கேட்பவர்களுக்கு தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை வழங்கினார்.

காபூல் விளையாட்டு மைதானத்தில் மரண தண்டனைகளை நிறைவேற்றியது உள்ளிட்ட மிக கடுமையான செயலுக்காக ஐ.நா.வின் தடை பட்டியலில் அவர் இடம் பெற்றுள்ளார்.


Tags:    

Similar News