செய்திகள்
கனிமொழி எம்.பி.

100 நாள் வேலை திட்டத்தில் ரூ.400 கோடி ஊழல் - கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

Published On 2021-01-25 11:38 GMT   |   Update On 2021-01-25 11:38 GMT
100 நாள் வேலைதிட்டத்தில் 400 கோடி ரூபாய் அளவிற்கு மெகா ஊழல் அரங்கேறி உள்ளது என தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
நெற்குப்பை:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’  என்ற தலைப்பில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

அவர் திருப்பத்தூரில் உள்ள காந்தி சிலை மற்றும் மருது பாண்டியர்களின் நினைவுத்தூணுக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார். பின்னர் சுயநிதி குழுக்கள் சந்திப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம் வழங்குதல், விவசாயிகள் சந்திப்பு, பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தல் என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 

அப்போது கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

மத்தியில் ஆளும் பா. ஜனதா அரசு விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து வருகிறது. மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க. அரசு பெண்களை பாதுகாக்க தவறி விட்டது. இளைஞர்களின் மத்தியில் வேலைவாய்ப்பு வெறும் கனவாகவே இருந்து வருகிறது.

100 நாள் வேலைதிட்டத்தில் 400 கோடி ரூபாய் அளவிற்கு மெகா ஊழல் அரங்கேறி உள்ளது. தி.மு.க. கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. 

ஆட்சிக்கு வந்தவுடன் மதுபான கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்த எடப்பாடி பழனிசாமி, அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும்  இன்றளவும் எடுக்கவில்லை. இன்னும் 3 மாதம் தான். மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் விவசாயிகளின் நலன் பேணுதல், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், நீட் தேர்வு இன்றி மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்குதல், 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாள் ஆக மாற்றுதல், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்தல், என மக்களின் அனைத்து தேவைகளையும் உடனடியாக நிறை வேற்ற நடவடிக்கை மேற்கொள் ளப்படும். 

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News