செய்திகள்
உன்முக்த் சந்த், விராட் கோலி

எனது பயணம் விராட் கோலியிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டது: உன்முக்த் சந்த்

Published On 2019-09-03 11:05 GMT   |   Update On 2019-09-03 11:05 GMT
19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்ற இந்திய கேப்டன் உன்முக்த் சந்த், எனது பயணம் விராட் கோலியிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் உன்முக்த் சந்த். 26 வயதாகும் இவரது தலைமையில் கடந்த 2012-ம் ஆண்டு 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை இந்தியா வென்றது.

2000-த்தில் முகமது கைப் தலைமையிலான இந்திய அணியும், 2008-ல் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், 2018-ல் பிரித்வி ராஜ் தலைமையிலான இந்திய அணியும் உலகக்கோப்பையை வென்றது.

முகமது கைப், விராட் கோலி, பிரித்வி ராஜ் ஆகியோர் இந்திய அணியில் இடம்பிடித்தனர். ஆனால், உன்முக்த் சந்திற்கு மட்டும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

டெல்லி அணிக்காக விளையாடி வந்த உன்முக்த் சந்த், கடந்த 2017-ல் இருந்து ஓரங்கட்டப்பட்டு வந்தார். இதனால் அவர் டெல்லி அணியில் இருந்து விலகி உத்தரகாண்ட் அணிக்கு சென்றுள்ளார். அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி அணி இதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியது.

இந்நிலையில் இந்திய அணிக்காக இதுவரை விளையாடாதது குறித்து உன்முக்த் சந்த் கேட்ட கேள்விக்கு, எனது பயணம் விராட் கோலியிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்று  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உன்முக்த் சந்த் கூறுகையில் ‘‘எனது தலைமையில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணி உலகக்கோப்பையை வென்று 7 வருடங்கள் ஆகிறது. இந்த ஏழு வருடத்தில் ஏராளமான விஷயங்கள் மாறியுள்ளன.

மிகப்பெரிய தொடரில் இந்திய அணிக்காக தலைமை தாங்கியது நான் பெற்ற அதிர்ஷ்டம். என்னுடைய முன்னுரிமை பட்டியலில் இதற்குதான் முதல் இடம். அந்த உணர்வு நம்பமுடியாதவை.

நான் இந்திய அணிக்காக விளையாட விரும்புகிறேன். எனக்கு 26 வயதுதான் ஆகிறது. என்னுடைய ஆட்டத்திறனை மேம்படுத்தி அணியில் இடம் பிடிக்க முடியும். இதுதான் என்னுடைய உச்சகட்ட கனவு. மற்றதெல்லாம் கடவுள் கையில்தான் உள்ளது.

இந்திய அணியில் சில நேரங்களில் உடனடியாக இடம் கிடைக்கலாம். சில சமயங்களில் நேரம் எடுத்துக் கொள்ளும். ஒருவருடைய பயணத்தை மற்ற யாருடனும் ஒப்பிடக்கூடாது. விராட் கோலி, பிரித்வி ராஜ் போன்ற வீரர்களுக்கு உடனடியாக இடம் கிடைத்துவிட்டது. என்னுடைய பயணம் முற்றிலும் வேறுபட்டது.

நான் என்னுடைய சொந்த வழியில் பயணம் செல்ல விரும்புகிறேன். எனக்கென ஒரு வழி, ஒரு பெயரை உருவாக்க விரும்புகிறேன். என்னுடைய கனவு இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதுதான். அதற்கான கடினமான உழைத்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பேன்’’ என்றார்.
Tags:    

Similar News