ஆன்மிகம்
செயற்கையாக உருவாக்கப்பட்ட வைகை ஆற்றையும், குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகரையும் படத்தில் காணலாம்.

அழகன்குளத்தில் நீலப்பட்டு உடுத்தி செயற்கை வைகையில் எழுந்தருளிய கள்ளழகர்

Published On 2021-04-28 04:18 GMT   |   Update On 2021-04-28 04:18 GMT
அழகன்குளத்தில் நீலப்பட்டு உடுத்தி செயற்கை வைகையில் சந்தானகோபால கிருஷ்ண சாமி கள்ளழகர் வேடத்தில் எழுந்தருளினார். மிகவும் எளிமையாக கோவில் நிர்வாகத்தினர் இந்த நிகழ்ச்சியை பக்தர்கள் இன்றி நடத்தினர்.
மண்டபம் ஊராட்சி ஒன்றியம் அழகன்குளம் கிராமத்தில் மிகவும் பழமையான கோவிலான சந்தான கோபால கிருஷ்ணசாமி கோவிலில் ஆண்டுதோறும் மிக விமர்சையாக சித்திரை திருவிழா நடைபெறும். அப்போது கள்ளழகர் வேடம் அணிந்து சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருவது வழக்கம்.

இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமின்றி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். தற்போது கொரோனா 2-வது அலையால் அதிகமான மக்கள் பாதிக்கப் பட்டு வருவதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதால் இந்த ஆண்டு கடந்த ஆண்டைபோல் சித்திரை திருவிழா மிக எளிமையாக நடைபெற்றது.

கோவில் வளாகத்தில் செயற்கையாக உருவாக்கிய வைகையில் கள்ளழகர் எழுந்தருளினார்.

இதற்காக வைகையாற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. பின்னர் நேற்று காலை 6.45 மணி அளவில் அழகன்குளம் மெயின் சாலையில் உள்ள சந்தான கோபால கிருஷ்ணன் கோவிலில் குதிரை வாகனத்தில் நீலப்பட்டு உடுத்தி கள்ளழகர் செயற்கை வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. மிகவும் எளிமையாக கோவில் நிர்வாகத்தினர் இந்த நிகழ்ச்சியை பக்தர்கள் இன்றி நடத்தினர்.

மேலும் கோவிலில் அறங்காவலர்கள் மற்றும் கோவில் பூசாரிகள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு விழா இனிதே முடிவுற்றது. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வாசுகி ஸ்ரீதரன், கிருஷ்ண தெய்வபிரகாசம், அசோகன் அமுதா, சுமுகி பிரகலாதன் ஆகியோர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News