ஆன்மிகம்
குலசேகரன்பட்டினம் கோவிலில் தசரா திருவிழாவில் கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டபோது எடுத்த படம்.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2019-09-30 06:26 GMT   |   Update On 2019-09-30 06:26 GMT
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 8-ந் தேதி நடக்கிறது.
இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தப்படியாக தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தான். இங்கு ஆண்டுதோறும் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது திருவிழா கொடி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டது. அதன்பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. பின்னர் பக்தர்கள் கடலில் புனித நீராடி, கோவில் அர்ச்சகரிடம் காப்பு கட்டிக் கொண்டனர். முதல் நாள் விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் காப்பு கட்டிச் சென்றனர். பின்னர் பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனுக்கு காணிக்கை வசூலிக்க புறப்பட்டு சென்றனர். முன்னதாக வெளியூரில் இருந்து வந்த பக்தர்கள் கடலில் நீராடி புனித நீர் எடுத்துச் சென்றனர்.

கொடியேற்று விழாவில் இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், அ.தி.மு.க. உடன்குடி ஒன்றிய செயலாளர் மகாராஜன், குலசேகரன்பட்டினம் கிளை செயலாளர் சங்கரலிங்கம், வக்கீல் பழனிசங்கர், கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், அ.ம.மு.க. மாநில இளைஞர் அணி பாசறை இணை செயலாளர் மனோகரன், ஒன்றிய செயலாளர் அம்மன் நாராயணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தசரா திருவிழாவின் முதல் நாளான நேற்று இரவு அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதேபோல் விழா நாட்களில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. தினமும் இரவு 10 மணிக்கு அம்மன் பல்வேறு கோலங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 8-ந் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி அன்று காலை 10.30 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவில் முன்பாக எழுந்தருளி மகிசாசூரனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.

அதனை தொடர்ந்து 1 மணிக்கு கடற்கரை மேடை, சிதம்பரேசுவரர் கோவில், அபிஷேக மேடை, கலையரங்கம் ஆகியவற்றில் எழுந்தருளும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது. பின்னர் காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் வீதிஉலா வருதல், மாலை 4 மணிக்கு அம்மன் கோவிலுக்கு வந்த பின்னர், திருவிழா கொடி இறக்கப்பட்டு, பக்தர்கள் காப்பு களைந்து தங்கள் விரதத்தை நிறைவு செய்வார்கள். 10-ந் தேதியன்று அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடக்கிறது. அத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையரும், கோவில் தக்காருமான ரோஜாலி சுமதா, நிர்வாக அதிகாரி பரமானந்தம் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News