செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இடஒதுக்கீடு போராளிகளுக்கு மணிமண்டபம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி வரவேற்பு

Published On 2021-09-03 04:35 GMT   |   Update On 2021-09-03 04:35 GMT
இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு விழுப்புரத்தில் ரூபாய் 4 கோடி மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்துள்ளார்.
சென்னை:

சட்டமன்ற தேர்தலின் போது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தி.மு.க. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் பேசும்போது, இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 போராளிகளுக்கு தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்திருந்தார்.

அக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 போராளிகளுக்கு தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர், பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகனின் கோரிக்கையை ஏற்று 1987-ம் ஆண்டு நடைபெற்ற வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு விழுப்புரத்தில் ரூபாய் 4 கோடி மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்துள்ளார்.

அதோடு அவர்களின் வாரிசுகளுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பிற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News