செய்திகள்
எஸ்.பி.வேலுமணி

முடிந்துபோன விசாரணையை மீண்டும் தொடங்க முடியாது -ஐகோர்ட்டில் எஸ்.பி.வேலுமணி பதில் மனு

Published On 2021-10-13 10:38 GMT   |   Update On 2021-10-13 12:33 GMT
டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக, உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை தனக்கு வழங்கவேண்டும் என எஸ்.பி.வேலுமணி கூறி உள்ளார்.
சென்னை:

அதிமுக ஆட்சியின்போது சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் மற்றும் திமுக சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், ஐபிஎஸ் அதிகாரி பொன்னி தலைமையில் குழு அமைத்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அந்த குழு அளித்த அறிக்கையில், வழக்குப்பதிவு செய்வதற்கு இந்த புகாரில் எந்த ஆரம்பகட்ட முகாந்திரமும் இல்லை என கூறப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் வழக்கை கைவிட அரசு முடிவு செய்திருந்தது.

அதன்பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, எஸ்பி வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.



இந்த நிலையில், டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், முகாந்திரம் இல்லை என சொல்லி அரசால் கைவிட முடிவு எடுக்கப்பட்ட வழக்கில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்திருப்பதால், அறப்போர் இயக்கம்  தொடர்ந்த வழக்கு செல்லாது என கூறி உள்ளார். 

உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை எனக்கு வழங்கவேண்டும்.  அறிக்கையை இந்த வழக்கில் இணைக்க வேண்டும். 

மாநகராட்சி டெண்டர் முழுக்க முழுக்க வெளிப்படைத் தன்மையோடு ஒளிவுமறைவற்ற முறையில் வழங்கப்பட்டது. விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட இந்த டெண்டர் ஒதுக்கீட்டுக்கும் எனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. மாறியுள்ள அரசியல் சூழ்நிலையை சாதகமாக்கி, முடிந்துபோன விசாரணையை மீண்டும் தொடங்க முடியாது

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் வரும் 20ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. 


Tags:    

Similar News