செய்திகள்
தக்காளி

நெல்லையில் தக்காளி விலை திடீர் உயர்வு

Published On 2021-10-09 11:05 GMT   |   Update On 2021-10-09 11:05 GMT
ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தக்காளிகளை வியாபாரிகள் இறக்குமதி செய்து வருகிறார்கள். இதன் காரணமாக கடந்த 10 நாட்களாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
நெல்லை:

தினசரி சமையலில் முக்கிய இடத்தை பிடிப்பது தக்காளி. தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரம், ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி அதிக அளவு பயிரிடப்படுகிறது.

இங்கிருந்து நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பாவூர்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவு விளைச்சலால் தக்காளி விலை பெரும்பாலும் கட்டுக்குள்ளேயே இருக்கும்.

சில நேரங்களில் ஒற்றை இலக்கத்தில் கூட விலை இருப்பதால் பறிக்கப்படாமல் செடிகளிலேயே விட்டு விடும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வரும். இந்நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மலை, அணை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் தக்காளி செடிகள் தண்ணீரில் மூழ்கி அழுகி விட்டது. இதைத்தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் இருந்து நெல்லை மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு வரும் தக்காளியின் வரத்து குறைய தொடங்கியது. குறைந்த அளவு வரும் தக்காளிகளும் அதிகளவு சேதங்களுடன் வருவதால் பொதுமக்கள் அதனை வாங்குவதில்லை.

இதைத்தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தக்காளிகளை வியாபாரிகள் இறக்குமதி செய்து வருகிறார்கள். இதன் காரணமாக கடந்த 10 நாட்களாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

நெல்லையில் கடந்த வாரம் 1 கிலோ தக்காளி ரூ.15 முதல் 20 வரை விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ரூ.35க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று மேலும் அதிகரித்து ரூ.40 முதல், 45 வரை விற்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாளை காவலர் குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது:-

வழக்கமாக தென்காசி மாவட்டத்தில் இருந்து தக்காளிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். ஆனால் தொடர்மழை காரணமாக செடிகள் அழுகியதால் வெளி மாநிலங்களில் இருந்து தக்காளியை இறக்குமதி செய்து வருகிறோம்.

வாகன செலவு, இறக்குவதற்கான கூலி உள்ளிட்ட காரணங்களால் தற்போது தக்காளியின் விலை அதிகரித்து உள்ளது என்றார்.
Tags:    

Similar News