செய்திகள்
சென்னை காசிமேடு பகுதி

புயல் இன்று கரையை கடக்கும்போது 145 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்

Published On 2020-11-25 01:41 GMT   |   Update On 2020-11-25 01:41 GMT
வங்க கடலில் உருவான ‘நிவர்’ புயல், புதுச்சேரி அருகே தீவிர புயலாக இன்று மாலை கரையை கடக்கும்போது மணிக்கு 145 கி.மீ. வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

‘நிவர்’ புயல் காரணமாக தமிழகத்தின் டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் மழை கொட்டுகிறது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புதுச்சேரிக்கு கிழக்கே தென்கிழக்கே 350 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கே தென்கிழக்கே 410 கிலோ மீட்டர் தொலைவிலும் நிவர் புயல் நிலைக்கொண்டு இருக்கிறது. கடலூரில் இருந்து கிழக்கே தென்கிழக்கே 320 கி.மீ. தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளது. இது தீவிர புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரக்கூடும்.

தீவிர புயலாக மாறும் ‘நிவர்’ காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்குஅருகில் 25-ந்தேதி (இன்று) மாலையில் தீவிர புயலாகவே கரையை கடக்க வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு கரையை கடக்கும் நேரத்தில் மணிக்கு 120 கிலோ மீட்டர் முதல் 130 கிலோ மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் 145 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை மழை தொடரும். அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று) கடலோர பகுதிகளில் பரவலாகவும், உள் மாவட்டங்களில் பெரும்பான்மையான இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

கனமழையை பொறுத்தவரையில் தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதீத கனமழையும், தமிழகத்தின் ஏனைய வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

26-ந்தேதி (நாளை) செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய வடமாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில், ‘தாம்பரம் 9 செ.மீ., எம்.ஜி.ஆர். நகர், வடசென்னை தலா8 செ.மீ., சென்னை விமான நிலையம், ஆலந்தூர் தலா7 செ.மீ., கேளம்பாக்கம்6 செ.மீ.’ உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.
Tags:    

Similar News