செய்திகள்
டிடிவி தினகரன்- பிரேமலதா விஜயகாந்த்

அமமுக-தேமுதிக இடையே மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை: இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

Published On 2021-03-14 05:27 GMT   |   Update On 2021-03-14 05:27 GMT
அ.ம.மு.க.விடம் கூடுதல் தொகுதிகளை தே.மு.தி.க. கேட்டதுடன் பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்ததால் கூட்டணி பேச்சுவார்த்தையில் முறிவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
சென்னை:

அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க. பா.ம.க.வுக்கு இணையாக 23 தொகுதிகளை ஒதுக்காததால், கூட்டணியில் இருந்து கடந்த 9-ந்தேதி வெளியேறியது.

இதன்பிறகு கடந்த 5 நாட்களாக தே.மு.தி.க. தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறியதும் அந்த கட்சி முதலில் தி.மு.க.வுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஆனால் தி.மு.க. அணியில் தொகுதி உடன்பாடு முடிந்துவிட்டதால் தே.மு.தி.க.வால் அங்கு செல்ல முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரன் கட்சியான அ.ம.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதில் உடனடியாக உடன்பாடு ஏற்படவில்லை.

கூடுதல் தொகுதிகளை தே.மு.தி.க. கேட்டதுடன் பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்ததால் கூட்டணி பேச்சுவார்த்தையில் முறிவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து தே.மு.தி.க. தனித்து போட்டியிட ஆயத்தமானது. மாவட்டச் செயலாளர்களிடம் தேர்தலில் போட்டியிடும் நிர்வாகிகளின் பட்டியலை அந்த கட்சி சேகரித்தது.

ஆனால், தனித்து போட்டியிடுவதில் தே.மு.தி.க. நிர்வாகிகள் யாருக்கும் விருப்பம் இல்லை.

கூட்டணி அமைத்து போட்டியிட்டால் வெற்றி பெற்றுவிடலாம் என்று கருதியே விருப்ப மனுக்களை தாக்கல் செய்தோம் என்றும், தனித்து களம் இறங்கினால் நாங்கள் போட்டியிட விரும்பவில்லை என்றும் நிர்வாகிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று பலரும் பின்வாங்கினர்.

இது தே.மு.தி.க. தலைமையை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனை தொடர்ந்து அந்த கட்சி மீண்டும் அ.ம.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அ.ம.மு.க. கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. மற்றும் ஓவைசியின் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் இடம்பெற்றால், குறிப்பிட்ட தொகுதிகளில் செல்வாக்கை மீண்டும் நிரூபிக்கலாம் என்று தே.மு.தி.க. நம்புகிறது.

இதையடுத்து அ.ம.மு.க. கூட்டணியில் 70 தொகுதிகள் வரை தே.மு.தி.க. கேட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் இரவு 2 கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் சந்தித்து பேசி உள்ளனர்.

தே.மு.தி.க. கூட்டணிக்கு வந்தால் இடங்களை ஒதுக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அ.ம.மு.க.வும் சுமார் 50 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை இன்னும் அறிவிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து அ.ம.மு.க- தே.மு.தி.க. இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தையில் இன்று உடன்பாடு எட்டப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இதையடுத்து தே.மு.தி.க. தனது இறுதி முடிவை இன்று வெளியிட உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய பிறகு தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த நிலை மாறும் சூழல் ஏற்படுகிறது.

தமிழக தேர்தல் களத்தில் டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க.வுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டு தேர்தலை சந்திக்கிறார்.

அந்த கட்சியுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைப்பதன் மூலம் வெற்றி பெறுகிறதோ, இல்லையோ, கூடுதலாக ஓட்டுகளை பிரிக்க வாய்ப்பு இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.
Tags:    

Similar News