செய்திகள்
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வசந்தா

கணவருடன் சேர்த்து வைக்க கோரி மாற்றுத்திறனாளி பெண் தர்ணா

Published On 2021-09-18 04:53 GMT   |   Update On 2021-09-18 04:53 GMT
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் தவிக்கும் மாற்றுத்திறனாளி பெண், கணவரும் கைவிட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறார்.
தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகிலுள்ள துட்டம்பட்டி கிராமம் கிழக்குமேடு பகுதியை சேர்ந்த படவெட்டி- கன்னியம்மாள் தம்பதியரின் மகள் வசந்தா (வயது30). மாற்றுத்திறனாளியான இவரை அதே கிராமத்தை சேர்ந்த பைபாஸ் பகுதியில் வசிக்கும் பெரியண்ணன்-சரோஜா தம்பதியரின் மகன் சரவணன் (37) என்பவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தனர்.

சரவணன் கூட்டுறவு துறையில் பணிபுரிந்து வருகிறார். திருமணத்தின் போது வசந்தாவிற்கு பெற்றோர் 2 சவரன் நகை போட்டு அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் சரவணன் வசந்தாவுடன் 2 ஆண்டு குடும்பம் நடத்தி விட்டு மீண்டும் 10 சவரன் நகை கேட்டு பெற்றோருடன் சேர்ந்து அடித்து விரட்டியதாக தெரிகிறது.

இதனால் வசந்தா தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இது தொடர்பாக ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் கணவன்- மனைவி இருவரையும் பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் வசந்தாவை விவாகரத்து செய்ய போவதாக கூறி மீண்டும் மாமனார், மாமியார் வீட்டைவிட்டு விரட்டியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த வசந்தா கடந்த 2 நாட்களாக கணவர் வீட்டின் வெளியே உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். குழந்தை இல்லாத ஏக்கத்தில் தவித்து வந்த நிலையில் கணவரும் கைவிட்டதால் என்ன செய்வதென்று திக்கு தெரியாமல் தவித்து வருகிறார். வசந்தாவின் போராட்டம் காரணமாக 2 நாட்களாக கணவர் சரவணன் வீட்டிற்கு வராமல் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News